கந்தர்வக்கோட்டை: குடிநீர் விநியோகிப்பாளர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை
குடிநீர் விநியோகிப்பாளரின் தலையில் கல்லைப் போட்டு மர்ம நபர்கள் கொலை
கந்தர்வக்கோட்டையில் குடிநீர் விநியோகிப்பாளர் தலையில் கல்லை போட்டு கொன்ற சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஒன்றியம், வீரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி மகன் ராஜகோபால் (50). இவர் டேங்க் லாரி மூலம் கந்தர்வகோட்டை பகுதிகளில் குடிநீர் விநியோகித்து வந்தார்.
இந்த நிலையில், வழக்கம்போல் டிராக்டர் வாகனத்தில் குடிநீர் ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை பட்டுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை சாலையில் மட்டங்கால் பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வாகனத்தை வழிமறித்து ராஜகோபாலை கடத்திச் சென்று, அருகிலிருந்த புதருக்குள் அழைத்துச் சென்று தாக்கியதுடன், தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.
Advertisement
இந்த பயங்கரமான தாக்குதலில் ராஜகோபால் தலை நசுங்கி பரிதாபமாக இறந்து கிடந்தார். இதனைத் தொடர்ந்து, அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து கந்தர்வக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ராஜகோபாலின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.