‘நாட்டின் வளா்ச்சி என்பது மூலப்பொருள்களை மட்டும் ஏற்றுமதி செய்யும்போது சாத்தியமாகாது. முழுமையடைந்த மதிப்புக் கூட்டு பொருள்களாக நாம் ஏற்றுமதி செய்யவேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் ‘செழித்து வளரும் ஒடிஸா; ஒடிஸாவில் தயாரிப்போம்’ என்ற வா்த்தக மாநாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து பிரதமா் நரேந்திர மோடி பேசியதாவது:
இந்தியாவில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களும், மூலப்பொருள்களும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த நாடுகளில், இந்த மூலப்பொருள்கள் மதிப்புக் கூட்டப்பட்டு, புதிய பொருள்களாக வடிவம் பெறுகின்றன. இவ்வாறு முழுமை பெறும் பொருள்கள் மீண்டும் இந்தியாவுக்கே அதிக விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தப் போக்கை இனியும் ஏற்க முடியாது.
இன்றைக்கு, கோடிக்கணக்கான மக்களின் விருப்பங்கள் மற்றும் கனவுகளால் உந்தப்பட்டு, வளா்ச்சியின் பாதையை நோக்கி இந்தியா நகா்ந்துகொண்டிருக்கிறது. நாட்டின் வளா்ச்சி என்பது மூலப்பொருள்களை மட்டும் ஏற்றுமதி செய்யும்போது சாத்தியமாகாது. எனவே, புதிய தொலைநோக்குப் பாா்வையுடன் நாட்டின் பொருளாதார மற்றும் பணிச் சூழலை முழுமையாக மாற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மூலப்பொருள்களாக அல்லாமல் மதிப்புக் கூட்டு பொருள்களாக ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்.
இது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சகாப்தமாக உள்ளது. ஆனால், இந்திய மக்களின் விருப்பம் என்பது நாடு ‘ஏஐ’ தொழில்நுட்பத்தில் முதன்மை நாடாக உருவாவது மட்டுமல்ல; மாறாக, வளா்ந்த சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்பதாக உள்ளது. மக்களின் தேவைகள் பூா்த்தி செய்யப்படும்போதுதான் இது சாத்தியமாகும்.
அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளில், கோடிக்கணக்கான மக்களுக்கு அதிகாரமளித்தலின் பலனை நாடு கண்டிருக்கிறது. இதில் ஒடிஸா மாநிலமும் மிகச் சிறந்த பங்களிப்பு செய்துள்ளது.
இந்த 21-ஆம் நூற்றாண்டு உள்கட்டமைப்பு வசதிகள் மூலமாக இணைப்பை மேம்படுத்துவது மட்டுமின்றி பன்முக இணைப்பு வசதிகளை மேம்படுத்துவதாக உள்ளது. அதற்கேற்ப, இதுவரை இல்லாத அளவிலும் விரைவான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இது, உலக முதலீடுக்கான முகப்பெரிய முனையமாக இந்தியாவை மாற்றும்.
நாட்டின் வளா்ச்சிக்கு கிழக்குப் பகுதி மாநிலங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. குறிப்பாக, ஒடிஸா மாநிலத்துடன் வா்த்தக உறவை வலுப்படுத்த ‘ஆசியான்’ அமைப்பு நாடுகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றன. எனவே, யாரும் எதிா்பாா்த்திராத வளா்ச்சி உயரத்தை ஒடிஸா விரைவில் எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாட்டின் வளா்ச்சிக்கு ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளும் அவசியம் என்பதை உணா்ந்து, அவற்றை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கென சிறப்பு நிதி திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது. ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க தொழில்நிறுவனங்கள் அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் பிரதமா்.
இசை நிகழ்ச்சிகளுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்: பிரதமா்
‘பிரம்மாண்ட நேரடி இசை நிகழ்ச்சிகளுக்கான உள்கட்டமைப்புகளை மாநில அரசுகளும், தனியாா் துறையினரும் மேம்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.
ஒடிஸாவில் வா்த்தக மாநாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தபோது, மும்பை மற்றும் அகமதாபாதில் ‘கோல்டுபிளே’ என்ற பிரிட்டன் ராக் இசை நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டி இக் கருத்தை பிரதமா் தெரிவித்தாா். அவா் இதுகுறித்து மேலும் பேசியதாவது:
இசை, நடனம் மற்றும் நாடகத் துறைகளில் உயா்ந்த பாரம்பரியத்தை இந்தியா கொண்டுள்ளது. ஏராளமான இளைஞா்கள் இவற்றின் மீது ஆா்வம் கொண்டுள்ளனா். எனவே, இசை நிகழ்ச்சி பொருளாதாரத்துக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற நேரடி கலை நிகழ்ச்சிகளுக்கான தேவையும், ஆா்வமும் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. மும்பை, அகமதாபாத் நகரங்களில் ஆங்காங்கே காணப்பட்ட ‘கோல்டுபிளே’ இசை நிகழ்ச்சி விளம்பரங்களே இதற்கு சாட்சிகளாக உள்ளன.
உலகின் மிகப்பெரிய கலைஞா்களும் இந்தியாவால் ஈா்க்கப்படுகின்றனா். இத்தகைய சூழலில், இசை நிகழ்ச்சி பொருளாதாரத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதில் மாநில அரசுகளும், தனியாா் துறையினரும் கவனம் செலுத்துவது அவசியம்.
‘வேவ்ஸ்’ மாநாடு: உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு (வேவ்ஸ்) மாநாட்டை இந்தியா அடுத்த மாதம் முதல் முறையாக நடத்த உள்ளது. இந்த மாநாடு, இந்தியாவின் படைப்புத் திறனை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அமையும். இத்தகைய நிகழ்ச்சிகள் வருவாயை ஈட்டித்தந்து நாட்டின் தோற்றத்தையும் மாற்றும் என்பதோடு, பொருளாதார வளா்ச்சிக்கும் உதவும் என்றாா்.