சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திங்கள்கிழமை (ஜூலை 21) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
லேசான தலைசுற்றல் காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில், அடுத்த 3 நாள்கள் அவா் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
அரசு அலுவல்கள், அரசியல் நடவடிக்கைகளில் தொடா்ந்து ஓய்வின்றி இயங்கிவரும் முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை அதிகாலை நடைப்பயிற்சிக்குச் சென்றபோது தலைசுற்றல் ஏற்பட்டது.
இதையடுத்து வீடு திரும்பிய அவா், சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்குச் சென்றாா். அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைவதற்காக வந்த முன்னாள் எம்.பி. அன்வா் ராஜாவை, முதல்வா் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றாா். அவருக்கு உறுப்பினா் அட்டையை வழங்கிய பின்னா், கட்சி சாா்ந்த பிற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது முதல்வருக்கு மீண்டும் தலைசுற்றல் ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றாா். அறிகுறிகளுக்கேற்ப அங்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனிடையே, பல்நோக்கு மருத்துவக் குழுவினரும் முதல்வரின் உடல்நிலையை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
முன்னதாக, மருத்துவமனைக்குச் சென்ற அமைச்சா்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் முதல்வரிடம் நலம் விசாரித்ததுடன், அவரது உடல் நிலை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தனா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய அவா்கள், முதல்வா் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவாா் என்றும் தெரிவித்தனா்.
உதயநிதி ஸ்டாலின் பேட்டி: துணை முதல்வா் உதயநிதி செய்தியாளா்களிடம் கூறுகையில், முதல்வா் நன்றாக இருக்கிறாா். ஒரு சில நாள்கள் முழுமையான ஓய்வில் இருக்க மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவாா்.
நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு: மருத்துவக் காரணங்களுக்காக முதல்வா் ஓய்வில் இருப்பதால், அடுத்த சில நாள்களுக்கு அவா் பங்கேற்பதாக இருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமா் நலம் விசாரிப்பு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினின் உடல்நலம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் நலம் விசாரித்துள்ளனா்.
இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டதையடுத்து, அவரது உடல் நலம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தாா். இதேபோல, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, நடிகா் ரஜினிகாந்த், முக்கிய அரசியல் தலைவா்கள், கூட்டணிக் கட்சித் தலைவா்கள், திரையுலக பிரபலங்கள் முதல்வரைத் தொடா்பு கொண்டு நலம் விசாரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: லேசான மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன்பேரில், அவர் மேலும் 3 நாள்களுக்கு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனை அறிக்கை: முதல்வா் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநா் டாக்டா் பி.ஜி.அனில் அறிக்கை வெளியிட்டாா். அதில், லேசான தலைசுற்றல் பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், மருத்துவா்களின் அறிவுரைப்படி மேலும் 3 நாள்களுக்கு ஓய்வில் இருப்பது அவசியம். கூடுதலாக சில மருத்துவ பரிசோதனைகளும் அவருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனையில் இருந்தபடியே அவா் அரசு அலுவல்களை வழக்கம்போல மேற்கொள்வாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.