தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர் செல்வம் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் வேளையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது. யார் யாருடன் கூட்டணி? மும்முனைப் போட்டியா? நான்கு முனைப் போட்டியா? என பரபரப்பு நிலவி வருகிறது.
இதனை மேலும், தீவிரப்படுத்தும் விதமான பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக தமிழகம் வருகிறார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அமமுக ஆதரவு தெரிவித்தாலும், ஓபிஎஸ் அணியினரை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டார்.
முன்னதாக, தமிழகம் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ, அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடப்போவதில்லை எனத் தெரிவித்திருந்தார்.
மீண்டும் அதிமுகவில் இணையும் முயற்சியில் ஓ.பன்னீர் செல்வம் ஈடுபட்டுள்ளதாகவே தோன்றுகிறது. இதனால், அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவாரா? அல்லது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்வாரா? அல்லது தனித்து போட்டியிடப் போகிறாரா? என சந்தேகங்கள் எழுகின்றன.
இருப்பினும், பிரதமர் மோடியைச் சந்திக்க தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதன்படி, பன்னீர் செல்வத்துக்கு பிரதமர் மோடியைச் சந்திக்க தூத்துக்குடி விமான நிலையத்தில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, ரூ.1,032 கோடியில் 3 முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
அங்கு விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத் திறப்பு விழா மற்றும் மத்திய அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டப் பணிகளின் தொடக்க விழாவும் விமான நிலைய வளாகத்தில் நாளை (ஜூலை 26) நடைபெறுகிறது. பிரதமர் வருகையை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் பதவியேற்றார் கமல்ஹாசன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.