மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று (மே 12) காலை 6 மணியளவில் நடைபெற்றது. இதில், தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாக்கோலம் பூண்ட தூங்காநகரம்
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
தெற்கு மாசி வீதி அருள்மிகு வீரராகவப் பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் வரவேற்றார். பின்னர், ராமராயர் மண்டகப்படியில் குழுமியிருந்த திரளான பக்தர் கள்ளழகர் மீது தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
லட்சக்கணக்கில் திரண்டிருந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டு கள்ளழகரை வழிபட்டனர். மேலும், நேர்த்திக்கடனாக பக்தர்கள் கருப்புசாமி வேடமிட்டு அழகர் மீது தண்ணீரை பீச்சி அடித்தனர்.
தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பச்சை பட்டுடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினால், நாடு செழிக்கும் என்று நம்பப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அழகருக்கு அணிவிக்கப்பட்டது.
பலத்த பாதுகாப்பு
பாதுகாப்பு பணியில் மட்டும் 4000-க்கும் அதிகளவிலான போலீசார் குவிக்கப்பட்டு ஈடுபடுத்தப்பட்டு, 400 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணமாக போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ட்ரோன்கள் மூலமும் கண்காணிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அழகா் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதியான ஆழ்வார்புரம் ஆற்றுப் பகுதியில், இந்து அறநிலையத் துறை, வீரராகவப் பெருமாள் கோயில் சாா்பில் மண்டகப்படி அமைக்கப்பட்டு 2 டன்னுக்கு அதிகமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அழகர் எழுந்தருளிய வைகையாற்றுப் பகுதியில் பக்தா்கள் பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்வதற்காக மூன்று அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு இரவில் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளும் கள்ளழகரை விடிய விடிய பொதுமக்கள் தரிசிக்கவுள்ளனர். அதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை (மே 13-ம் தேதி) காலை அங்கிருந்து வண்டியூர் வைகை நடுவே உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனமும், நாரைக்கு முக்தியும் அளிக்கிறார்.
அங்கிருந்து இரவில் ராமராயர் மண்டகப்படிக்கு சென்று எழுந்தருளியதும், விடிய விடிய தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. புதன்கிழமை (மே 14 ஆம் தேதி) ராமராயர் மண்டகப்படியில் இருந்து புறப்பாடாகி வைகை திருக்கண், ஆழ்வார்புரம், கோரிப்பாளையம் வழியாக தல்லாகுளம் சேதுபதி மண்டகப்படியில் கள்ளழகர் எழுந்தருள்வார். மே 14 ஆம் தேதி இரவு பூப்பல்லக்கில் எழுந்தருளும் கள்ளழகர், மே 15-ம் தேதி காலை அழகர்மலை நோக்கி பல்லக்கில் புறப்பாடாகிறார்.
இதையும் படிக்க: குருப்பெயர்ச்சி பலன்கள் 2025
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.