கொடநாடு எஸ்டேட் கொள்ளை, கொலை விவகாரம் குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வியாழக்கிழமை பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் அமமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தேர்தல் கூட்டணி, வியூகங்கள் குறித்து நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:
”வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விண்ணப்பத்தில் உள்ள இரண்டாம் பகுதிகளில் இருக்கும் கேள்விகளை சாதாரண மக்களால் பூர்த்தி செய்ய முடியாத வகையில் உள்ளது. 2005 ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட கேள்விகளை தவிர்த்தால் நன்றாக இருக்கும். இல்லையென்றால், தேர்தலுக்குப் பிறகு இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைத்தால் 2026 ஆம் ஆண்டில் வெற்றி பெற முடியாது. இதைதான் 2021 தேர்தலின்போதும் நான் கூறினேன். மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கிஷன் ரெட்டி மூலம் கடிதம் மூலமாகவும் இதனை எழுதிக் கொடுத்துள்ளேன்.
எடப்பாடி பழனிசாமியுடன் நான் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. தலைவருக்கான தகுதியே இல்லாதவராக அவர் செயல்படுகிறார். வருகின்ற தேர்தலில் அதிமுக மூன்றாமிடம்தான் பிடிக்கும். திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையேதான் போட்டி நிலவும்.
எங்கள் கட்சி சிறிய கட்சிதான். கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிக வாக்கு சதவீதத்தைப் பெறுவோம். கூட்டணிக்காக நிறைய கட்சிகள் பேசி வருகின்றனர். இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், நாங்கள் இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் குறித்து உளவுத் துறை அளிக்கும் ஆவணங்கள் அனைத்தும் போயஸ் கார்டனில்தான் இருக்கும். நானே பல அறிக்கைகளை கிழித்து எரித்துள்ளேன். அதுபோன்று கொடநாட்டிலும் இருப்பதாக யாரோ கூறியுள்ளனர். அதனை நம்பி காவலரைத் தாக்கிவிட்டு, ஜன்னல்களை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். ஆனால், அதற்கு முன்னதாகவே போயஸ் கார்டனில் கிழித்துவிட்டோம். கொடநாட்டில் எதாவது கிடைத்தால் எனக்கு எதிராக பயன்படுத்தலாம் என நினைத்துள்ளார். பாவம் பழனிசாமி, அங்கு சென்று தேடிக்கொண்டிருந்தார். பழனிசாமி என்ற துரோகத்தை வீழ்த்தாமல் நான் ஓயமாட்டேன்.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.