முகப்பு
தமிழ்நாடு

ரூ. 5,000 அல்ல, ரூ. 50,000 கொடுத்தாலும் திமுக தோல்வியடைவது உறுதி! - டிடிவி தினகரன்

மகளிருக்கு திமுக அரசு ரூ. 5,000 வழங்கியதற்கு டிடிவி தினகரன் கருத்து...

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 6:36 AM
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
பகிர்:

தமிழகத்தில் மகளிருக்கு ரூ. 5 ஆயிரம் அல்ல, ரூ. 50 ஆயிரம் கொடுத்தாலும் திமுக தோல்வியடையப் போவது உறுதி என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி மகளிர் உரிமைத் தொகை பெறும் மகளிரின் வங்கிக் கணக்குகளில் இம்மாதம் ரூ. 5,000 வரவு வைத்துள்ளது தமிழக அரசு.

பிப்ரவரியுடன் மார்ச், ஏப்ரல் மாதத்துக்கும் சேர்த்து ரூ. 3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ. 2,000 வரவு வைக்கப்பட்டதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதனை எதிர்க்கட்சியினர் பலரும் விமர்சித்து வரும் நிலையில் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தமிழகத்தில் மகளிருக்கு ரூ. 5 ஆயிரம் மட்டுமில்லை ரூ. 50 ஆயிரம் கொடுத்தாலும் திமுக தோல்வியடையப் போவது உறுதி.

தோல்வி பயத்தில் எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தமிழக மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது.

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக 3 ஆயிரம் ரூபாயும், இதுவரை இல்லாத கோடைக் கால சிறப்புத் தொகுப்பு என 2 ஆயிரம் ரூபாயும் என மொத்தமாக வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சமூகநீதி எனும் தலைப்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தகுதியான பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்த திமுக, தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக வாக்குறுதி அளித்திருப்பது ஒட்டுமொத்த மகளிரையும் ஏமாற்றும் வேலையாகும்.

தேர்தல் ஆணைய நடவடிக்கைகளைக் காரணம் காட்டி இதுபோன்ற அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசரகதியில் வெளியிட்டிருப்பதன் பின்னணியில் இருப்பது திமுகவிற்கு ஏற்பட்டிற்கும் தேர்தல் தோல்வி பயம்தானே தவிர, மகளிர் மீதான உண்மையான அக்கறை இல்லை என்பதைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

எனவே, தோல்வி பயத்தில் திமுக எடுக்கும் எந்த வித அஷ்திரமும் எடுபடாது என்பதோடு பணத்தைக் கொடுத்து தமிழக மக்களின் வாக்குகளைப் பெறத் துடிக்கும் திமுகவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து படுதோல்வியைப் பரிசாக வழங்கப்போவது உறுதி" என்று பதிவிட்டுள்ளார்.

summary

TTV Dhinakaran's comments on DMK govt gives Rs. 5,000 to women

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.