புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இரண்டு நாள் பயணமாக புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (நவ. 10) ரூ.767 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அவர் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்துக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
முதலாவது அறிவிப்பு - அறந்தாங்கி வட்டத்தில் இருக்கும் வீரகொண்டான் ஏரி, செங்கலநீர் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் 15 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு – கீரமங்கலம் பகுதி விவசாயிகளின் நலன் கருதி, அப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், பழங்களை பாதுகாப்பாக இருப்பு வைத்திட குளிர்ப்பதன கிடங்கு 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
மூன்றாவது அறிவிப்பு - ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும், விளானூர் ஊராட்சி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வடகாடு ஊராட்சியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்நிலை பாலங்கள் அமைக்கப்படும்.
நான்காவது அறிவிப்பு - புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்களுக்கு ஐ.டி. துறையில் வேலைவாய்ப்புகளை அளிப்பதற்கு புதுக்கோட்டையில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும்.
அடுத்த இரண்டு அறிவிப்பும் கொஞ்சம் ஸ்பெஷல் அறிவிப்பு!
ஐந்தாவது அறிவிப்பு - கந்தர்வகோட்டை பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, கந்தர்வகோட்டை ஊராட்சி – பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
ஆறாவது அறிவிப்பு - பொன்னமராவதி பேரூராட்சி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பொன்னமராவதி பேரூராட்சி - நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.