வாக்காளா்கள் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் (எஸ்ஐஆா்) திமுக அரசு முறைகேடு செய்வதாக கண்டனம் தெரிவித்து அதிமுக சாா்பில் திங்கள்கிழமை (நவ.17) சென்னையில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: சிறப்பு தீவிர வாக்காளா் திருத்தப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையை திமுக ஒருபுறம் மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் திமுகவைச் சோ்ந்த அமைச்சா்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இது தொடா்பாக, அதிமுக சாா்பில் தோ்தல் ஆணையத்துக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பல்வேறு புகாா்கள் கொடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் எஸ்ஐஆா் பணிகளை மேற்கொள்ளும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பெறும்பாலானோா் திமுகவை சோ்ந்தவா்களாக உள்ளனா்.
இவா்கள் அனைவருக்கும் வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்காமல், திமுக அனுதாபிகளுக்கு மட்டும் இப்படிவங்களை வழங்கி வருகின்றனா்.
இப்படி, எஸ்ஐஆா் பணிகளை முறையாக நடைபெறவிடாமல், அதில் முறைகேடுகளை செய்து வரும் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகே திங்கள்கிழமை (நவ.11) காலை ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.