6.36 கோடி வாக்காளர்களுக்கும் ஒரே மாதத்தில் எஸ்ஐஆர் படிவம் எப்படி சென்று சேரும்? என எஸ்ஐஆர் குறித்து தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் எஸ்.ஐ.ஆர். தொடர்பான மற்றும் இதர அரசியல் கட்சி கூட்டங்களுக்கு தவெகவையும் அழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய், தலைமை தேர்தல் ஆணையருக்கு இன்று கடிதம் எழுதினார். எஸ்.ஐ.ஆரில் உள்ள சிக்கல்களையும் அந்த கடிதத்தில் பட்டியலிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து எஸ்ஐஆர் குறித்து விஜய் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பேசியிருப்பதாவது,
"இந்திய அரசியல் சாசனம் நமக்கு கொடுத்திருக்கும் உரிமைகளில் மிக முக்கியமானது வாக்குரிமை. ஒரு மனிதன் உயிருடன் இருப்பதற்கான அடையாளம். வாக்கு என்பது உரிமை மட்டுமல்ல, நமது வாழ்க்கையும்கூட.
தமிழ்நாட்டில் இப்போது யாருக்குமே வாக்களிக்கும் உரிமை இல்லை என்றால் நம்புவீர்களா? நான், நீங்கள் உள்பட யாருக்கும் இல்லை. இதுதான் நிஜம்.
கொஞ்சம் ஏமாந்தால் நம்மைப்போல லட்சக்கணக்கான மக்களின் நிலை இதுதான். ஓட்டு போட முடியாத நிலை வந்தாலும் வரலாம். இதற்கு காரணம் எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்)
கடந்த ஜனவரி மாதம் எடுத்த கணக்கெடுப்பில் வாக்காளர் பட்டியலில் 6.36 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைவருக்குமே இப்போது வாக்குரிமை இல்லை.
வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கொடுக்கும் படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டும். இதையெல்லாம் சரிபார்த்து வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். அந்த பட்டியலில் நம் பெயர் இருந்தால் மட்டுமே நம்மால் வாக்களிக்க முடியும். அதை வெளியிடும் வரை நமக்கு வாக்குரிமை இருக்கிறதா என்று சொல்ல முடியாது.
அந்த வரைவு வாக்காளர் பட்டியலில் நம் பெயர் இல்லை என்றால் அடுத்து சில பணிகள் நடக்கின்றன. இதில் நிறைய சிரமங்கள், குழப்பங்கள் இருக்கின்றன. இது சரிபார்ப்பா, புதிய பதிவா? என்று குழப்பம் இருக்கிறது.
மக்கள் படிவத்தை நிரப்பும்போது ஒரு பிரதியை அலுவலரிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். புதிய வாக்காளர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து அதற்கான ஒரு பிரதியை வைத்துக்கொள்ளுங்கள்.
இதையெல்லாம் செய்தாலும் சில கேள்விகள் குழப்பங்கள் இருக்கின்றன.
6.36 கோடி வாக்காளர்களுக்கும் ஒரே மாதத்தில் எஸ்ஐஆர் படிவம் எப்படி சென்று சேரும்? இதற்காக மக்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டுமா?
இந்த பணியால் அதிகம் பாதிக்கப்படப் போவது உழைக்கும் மக்கள், ஏழைகள், வேலைக்குச் செல்லும் பெண்கள்தான். இவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்?
இறந்தவர்கள், போலி வாக்காளர்களை நீக்கினால் போதுமானது. புதிதாக சேர்க்க வேண்டியவர்களை சேர்த்தால் முடிந்துவிட்டது. ஏன் அனைத்து வாக்காளர்களுக்கு புதிதாக பதிவு?
மேலும் சில புகார்கள் வருகின்றன. தவெகவினருக்கு படிவங்கள் கொடுக்க மறுக்கின்றனர். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் இதைச் செய்கிறார்கள்.
தவெக தோழர்கள் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். எல்லோருக்கும் படிவம் சென்றுசேர வேண்டும். மக்களுக்கு படிவத்தை நிரப்பிக் கொடுங்கள்.
ஜென் ஸி வாக்காளர்கள் படிவம் 6-ஐ சரியான ஆவணங்களுடன் கவனமுடன் நிரப்பி கொடுக்க வேண்டும். இந்த தேர்தலில் நீங்கள்தான் முக்கிய சக்தி. புதிய வாக்காளர்களை சேர்க்காமல் தவிர்க்க அவர்கள் எல்லா வேலையும் செய்வார்கள். எல்லா திசையிலும் பிரச்னை கொடுக்கும் அவர்கள் வாக்குரிமையில் உத்தமராக மாறப் போகிறார்களா என்ன?
வரும் தேர்தலில் நாம் யார் என்று காட்ட வேண்டும். வாக்கு, ஜனநாயகத்தை கையில் எடுக்க வேண்டும். வாக்குச்சாவடி முன்பாக தமிழ்நாடே திரண்டு நிற்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க | வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.