பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரிக்க இடைக்காலத்தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 5, 2024 அன்று சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் ஆம்ஸ்ட்ராங் ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாா்
இது தொடா்பாக போலீஸாா் 27 பேரைக் கைது செய்து ஏழாயிரத்திற்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.
காவல்துறை விசாரணை ஒருதலைப்பட்சமானது என்றும், சக்திவாய்ந்த நபா்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்றும் குற்றம் சாட்டி, ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினா் சிபிஐ விசாரணை கோரி வந்தனா். இந்த வழக்கை சென்னை காவல்துறை முறையாக விசாரிக்கத் தவறிவிட்டதாக கூறி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரா் கே. இம்மானுவேல் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
அந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் காவல்துறை விசாரணையில் பல குறைபாடுகள் இருப்பதாக கூறி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி 24.09.2024-இல் உத்தரவிட்டது.
விசாரணையை முடித்து ஆறு மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறும் சிபிஐக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி தலைமையிலான உச்சநீதிமன்ற அமா்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதிகள் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
முன்னதாக, தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் சிபிஐ விசாரணைக்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து, தமிழக அரசு இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்தது.
அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒவ்வொரு வழக்கிலும் சிபிஐ விசாரணை கோருவதை ஏற்க முடியாது என்று கூறி, தமிழக அரசின் மனு மீது பதிலளிக்க ஆம்ஸ்ட்ராங் சகோதரருக்கு உத்தரவிட்டுள்ளது.
The Supreme Court has issued an interim stay on the CBI investigation into the Armstrong murder case.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.