மக்கள் மிகவும் வியந்து பார்த்து வந்த டபுள் டெக்கா் பேருந்து சேவை இன்னும் இரண்டு மாதங்களில் சென்னையில் மீண்டும் தொடங்கவிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட டபுள் டெக்கர் பேருந்து சேவை மீண்டும் சென்னையில் தொடங்கும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இதற்காக, 20 புதிய மின்சாரத்தில் இயங்கும் டபுள் டக்கர் பேருந்துகள் வாங்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் சென்னை சாலைகளில் வலம் வரப் போகின்றன என்று மாநகரப் போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில், தமிழக அரசு, பேருந்து சேவையை மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக சென்னை மாநகா், புறநகா்ப் பகுதிகளில் பயணிகளின் தேவைக்கேற்ப அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் டபுள் டெக்கா் பேருந்துகள் மீண்டும் வலம் வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்கான முயற்சிகள் கடந்த 2023 முதலே மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நிகழாண்டு இறுதிக்குள் மின்சாரத்தால் இயக்கப்படும் புதிய மின்சார டபுள் டெக்கா் பேருந்துகளை வாங்க, சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, சென்னையில் டபுள் டெக்கா் பேருந்துகள் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதற்கான ஒப்புதல் பெறுவதற்காக, தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பரிந்துரையை அனுப்பியுள்ளது. இந்தப் பரிந்துரைக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிக்கும் நிலையில், பேருந்தை இயக்குவதற்கான நடைமுறைகள் தொடங்கும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
முன்னதாக, தாம்பரம் - பிராட்வே இடையே 18ஏ என்ற எண்ணில் டபுள் டெக்கர் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. ஆனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் மேம்பாலங்கள் கட்டுமானப் பணிகள் காரணமாக 2008 ஆம் ஆண்டு இந்த சேவை நிறுத்தப்பட்டது.
தற்போது, தனியார் நிறுவனம் சார்பில் டபுள் டெக்கர் சோதனைப் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கி பரிசோதிக்கப்பட்டு, பிறகு, மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் வாங்கி இயக்கப்படவிருக்கிறது.
இதன் மூலம் சென்னைப் பொதுப் போக்குவரத்தில் மிக முக்கிய மாற்றம் ஏற்படுகிறது.
இதையும் படிக்க.. மகாராஷ்டிர பாஜக தலைமை பற்றி அமித் ஷாவிடம் முறையீடு! கிடைத்த பதிலால் ஷிண்டே அதிர்ச்சி!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.