முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ள நிலையில், அவரை சந்தித்து அமைச்சர் சேகர் பாபு பேசியுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை புதன்கிழமை காலை நேரில் சந்தித்து எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் வியாழக்கிழமை காலை செங்கோட்டையன் இணையவுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டம் காரணமாக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் அறைக்குச் சென்ற அமைச்சர் சேகர் பாபு, செங்கோட்டையனை சந்தித்து நீண்ட நேரம் பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ள செங்கோட்டையனை திமுகவில் இணைக்க சேகர் பாபு மூலம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்தகட்ட நகர்வு குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாத செங்கோட்டையன், இன்று காலை ஒருநாள் பொறுத்திருங்கள் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஏற்கெனவே, அதிமுகவின் ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏவும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு திமுகவில் கடந்த மாதம் இணைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.