அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன், தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.
இதனைத் தொடர்ந்து, சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வீட்டுக்கு நேற்று மாலை நேரில் சென்ற செங்கோட்டையன், விஜய்யை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில், சென்னை பனையூரில் இன்று நடைபெற்ற நிகழ்வில், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.
திருப்பூர் முன்னாள் எம்பி சத்யபாமா உள்பட செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்துள்ளனர்.
முன்னதாக பனையூர் தவெக அலுவலகத்துக்கு வருகைதந்த செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்ஜிஆர் முதல் விஜய் வரை...
கடந்த 1977 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக எம்ஜிஆர் பதவியேற்ற போது, முதல்முறையாக கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு, சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார் செங்கோட்டையன்.
எம்ஜிஆரின் விசுவாசியாகவும், தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசியாகவும் அறியப்பட்ட செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையம் தொகுதியிலிருந்து மட்டும் 8 முறை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜெயலலிதாவின் பிரசாரப் பயணத்தை திட்டமிடுவதில் வல்லவராக அறியப்பட்ட செங்கோட்டையன், அவரது மறைவுக்குப் பிறகு பிரிந்த அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்தார்.
கடந்த மாதம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவா் ஜெயந்தி விழாவில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன், வி.கே.சசிகலா ஆகியோரைச் சந்தித்தாா். இதையடுத்து, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தாா்.
அதன்பின்னா், செங்கோட்டையனின் அரசியல் நகா்வு எந்த மாதிரியாக இருக்கும் என்கிற எதிா்பாா்ப்பு எழுந்த நிலையில், விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்துள்ளார்.
தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு அனுபவமும், தேர்தல் பிரசாரங்களை ஒருங்கிணைக்கும் ஆளுமையும் படைத்த செங்கோட்டையனின் வருகை தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.