நாமக்கல் கிட்னி முறைகேடு குற்றச்சாட்டு குறித்து தமிழக சட்டப்பேரவையில் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
நாமக்கல் கிட்னி முறைகேடு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கிட்னி முறைகேடு புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் பேசியதாவது:
”சிறுநீரக முறைகேடு நடப்பதாக தொலைக்காட்சியில் வெளியான செய்தியை அடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தினார்.
இந்த புகார் குறித்து தமிழக சுகாதாரத் திட்ட இயக்குநர் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. நாமக்கல், திருச்சி மருத்துவமனைகளில் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், இரண்டு தனியார் மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உரிமங்கள் நிறுத்திவைக்கப்பட்டது.
தவறான முறையில் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டு, சட்டங்களை தவறாக பயன்படுத்தியும் மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, தமிழக சுகாதாரத் திட்ட இயக்குநர் பரிந்துரை பேரில், இரண்டு தனியார் மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில் இரண்டு இடைத்தரகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 விதமான பரிந்துரைகளை விசாரணைக் குழு அளித்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தல்படி, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இதற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகள் மீதும் பாரபட்சமின்றி துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபோன்ற சிறுநீரக முறைகேடுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. ஆனால், கடந்த ஆட்சி காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. நாமக்கல்லில் முறைகேடுகள் நடப்பது தொடர்பாக 2017 ஆம் ஆண்டு மருத்துவத்துறைக்கு பல்வேறு ஆவணங்களை அதிகாரப்பூர்வமாக நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் அனுப்பியுள்ளார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆனால், தற்போது எந்த மருத்துவமனையாக இருந்தாலும், யாருடையதாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, இரு மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.