தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகைக்கு, புதிதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதி உடையவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அப்போது, தமிழகம் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார் என்றார்.
சென்ற 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாள் அன்று மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மகளிரின் பொருளாதார விடுதலைக்கு வழிவகுக்கும் இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் 1.14 லட்சம் மகளிருக்கு இந்த உரிமைத் தொகையை, முதல்வர் வழங்கி வருகிறார்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை சுமார் 26 மாதங்களில் ஒவ்வொரு மகளிருக்கும் ரூ.26,000 அரசு சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழக அரசு சுமார் ரூ.30 ஆயிரம் கோடி ரூபாயை மகளிர் உரிமைத் தொகைக்காக வழங்கியிருக்கிறது என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திட்டத்தில் மேலும் சில மகளிரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக, சில விதிகளில் முதல்வர் ஸ்டாலின் தளர்த்தி அறிவித்தார். அரசு மானியத்தில் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் குடும்பங்கள் உள்ளிட்ட சில திருத்தங்கள் நடத்தப்பட்டன.
தற்போது, தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பங்கேற்று, மகளிர் உரிமைத் தொகை பெற புதிதாக 28 லட்சம் பெண்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இவர்களது விண்ணப்பங்கள் வருவாய்த் துறை மூலம் ஆய்வு செய்து நவம்பர் 30க்குள் நிறைவு பெற்று, தகுதியான மகளிருக்கு வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.