சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் கட்டுமானங்களுக்கு அனுமதி தரக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ராம்சார் ஒப்பந்தப்படி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தையே பட்டா போட்டு விற்க துடிக்கும் கொள்ளை மாடல் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சதுப்பு நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தக் கூடாது என்பது நியதி. சதுப்பு நிலங்களில் கட்டப்படும் கட்டடங்கள் புயல், வெள்ளத்திற்கு தாங்காது என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ராம்சார் ஒப்பந்தப்படி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி. இதன்படி 'ராம்சார் அறிவிக்கை செய்யப்பட்ட சதுப்பு நிலத்திலோ, அல்லது அதன் எல்லையிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் எந்தவிதமான கட்டுமானங்களோ, சாலை கட்டுமானங்களோ மேற்கொள்ள அனுமதி அளிக்கக்கூடாது' என்று தென்மாநிலங்களுக்கான தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க சதுப்பு நிலங்கள் உயிர்நாடியாக திகழ்கின்றன என்ற காரணத்தினால், அவற்றை வேறு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தக்கூடாது.
இதை திமுக அரசு தளர்த்தி சுமார் 15 ஏக்கர் நிலத்தை 'பிரிகேட்' என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு, 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 1,250 குடியிருப்புகளை கட்ட அனுமதி வழங்கியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.
ஒரு பெரும் வெள்ளத்திற்கும், புயலுக்கும் இங்கு கட்டப்படும் கட்டடங்கள் தாங்காது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள். இத்திட்டத்தில் திமுக அரசு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடுவதை ஏற்க முடியாது.
சென்னையின் சுற்றுச்சூழலில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த நாசகார திட்டத்திற்கு தமிழக வனத் துறை, வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட அரசு துறைகள் அனுமதி அளித்துள்ளதன் மர்மம் என்ன ?
சென்னையை வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் அரணாகத் திகழக்கூடிய இந்த சதுப்பு நிலத்தில் எந்தவொரு கட்டுமான திட்டத்தையும் செயல்படுத்த இந்த அரசு அனுமதிப்பதை அதிமுக கை கட்டி வேடிக்கை பார்க்காது. கழக அரசு அமைந்தவுடன் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.