மோந்தா புயல் புயலால் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மோந்தா புயல் காரணமாக சென்னை முழுவதும் பரவலான மழை பெய்யக்கூடும். அதோடு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையையும் கொடுக்கும். எனவே, சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பில்லை. தென் சென்னையுடன் ஒப்பிடும்போது வட சென்னையில் 50-70 மிமீ வரை மழை பெய்யும். தென் சென்னையில் 10-50 மிமீ மழை பெய்யும். ஆந்திர மாநிலத்திற்கு அருகில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் புலிகாட் போன்ற பகுதிகளில் மட்டுமே கனமழை பெய்யும்.
அதுமட்டுமின்றி வடசென்னையில் மட்டும் கனமழை பெய்வதற்கு சில சாத்தியக் கூறுகள் உள்ளன. மழையானது திங்கள்கிழமை காலை தொடங்கி நாள் முழுவதும் பெய்யும். அவ்வப்போது தீவிரமாக மழை பெய்யலாம். பிறகு, செவ்வாய்க்கிழமை காலைக்குள் மழை நின்றுவிடும். ஆகையால், இன்று பள்ளிகள் விடுமுறைக்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. மாணவ, மாணவிகள் பள்ளி செல்ல தயாராகி கொள்ளுங்கள். மழை பெய்தாலும் அதை சமாளித்து சென்றுவிடலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு 11: 30 மணியளவில் (அக்.,26) 'மோந்தா' புயலாக உருமாறி வலுவடைந்தது. வங்கக் கடலில் புயல் உருவான நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இது, அந்தமான் தீவுகளின் போர்ட் பிளேயரில் இருந்து, மேற்கு, தென்மேற்கிலும் , சென்னையில் இருந்து கிழக்கு, தென்கிழக்கில் 600 கி.மீ., தொலைவிலும், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து, தென்கிழக்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது. மோந்தா புயல் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. பின்னா், வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, ஆந்திர கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடா அருகில் தீவிர புயலாக செவ்வாய்க்கிழமை (அக். 28) கரையைக் கடக்கக்கூடும்.
அந்த நேரத்தில் காற்று 110 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதன் காரணமாக திங்கள்கிழமை முதல் நவ. 2-ஆம் தேதி வரை வட தமிழகம் மற்றும் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதனிடையே சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.