வட சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைக் கால முன்னெச்சரிக்கைப் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) ஆய்வு செய்தார்.
வியாசர்பாடி கால்வாயில் தூர்வாரும் பணிகளையும் கேப்டன் காட்டன் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார்.
அமைச்சர் கே.என். நேரு, சென்னை மேயர் பிரியா ஆகியோரும் ஆய்வு செய்தனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய உதயநிதி ஸ்டாலின்,
"முதல்வரின் அறிவுறுத்தலின்படி அமைச்சர் கே.என். நேருவும் நானும் இணைந்து இப்பகுதியில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தோம்.
வட சென்னையில் 18 கால்வாய்கள், 13 குளங்கள் சென்னை மாநகராட்சி மூலமாக தூர்வாரப்பட்டுள்ளன.
331 கிமீ தூரத்திற்கு கால்வாய்கள் தூர்வாரப்பட்டு மூன்றரை லட்சம் டன் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் வரும் புகார்களை உடனடியாக கவனிக்க முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார்.
அதன்படி வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி குளம், கேப்டன் காட்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் ஆகியவை குறித்து ஆய்வு செய்திருக்கிறோம்.
அடுத்த 10 நாள்களுக்கு பெரிய மழை இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. எந்த அளவுக்கு மழை பெய்தாலும் சமாளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.