தமிழகத்தில் 5.13 சதவீதம் விவசாயிகளுக்கு சிறுநீரக செயல்திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக லான்செட் இதழில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு இணை நோய்கள் எதுவும் இல்லை என்றும், நேரடி வெயிலில் பணியாற்றுவதால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் காலகட்டத்தில் சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை சார்பில் விவசாயிகளிடையே கள ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 125 கிராமங்களைச் சேர்ந்த 3,350 விவசாயக் கூலிகளின் சிறுநீரக செயல் திறன் ஆய்வு செய்யப்பட்டது.
மாநில உறுப்பு மாற்று ஆணையச் செயலர் டாக்டர் என்.கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் அந்த ஆய்வை முன்னெடுத்தனர். அதில், 17 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, மீண்டும் மூன்று மாதங்களுக்குப் பிறகு மறுபரிசோதனை நடத்தியதில் அந்த விகிதம் 5.31 சதவீதமாக குறைந்தது. அவர்களில் 50 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, மரபணு பாதிப்பு என எந்தவிதமான இணை நோய்களும் இல்லை. நேரடி வெயிலில் பணியாற்றுவதால் அவர்களுக்கு சிறுநீரக செயல்திறன் பாதித்திருக்கலாம் என மருத்துவர் குழு தெரிவித்தது.
இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை சர்வதேச லான்செட் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக டாக்டர் என்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
திறந்தவெளியில் அதிக வெப்பச் சூழலில் தினமும் பல மணி நேரம் வேலை செய்யும் விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், விற்பனைப் பிரதிநிதிகள், செங்கல் சூளை தொழிலாளர்கள், பூச்சி மருந்துகள் தெளிப்பவர்கள், இரும்பு பட்டறை தொழிலாளர்கள், உப்பளங்களில் பணியாற்றுவோர் உள்ளிட்டோருக்கு உடலில் விரைவாக நீர்ச்சத்து குறைந்து விடுகிறது. இதனால் சிறுநீரகம் வெகுவாக பாதிக்கப்படும்; இது சிறுநீரக செலிழப்புக்கு வழி வகுக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீர் வெளிப்படும் அளவு குறையாது; ஆரம்ப கட்டங்களில் எவ்வித அறிகுறிகளையும் உணர முடியாது. இது குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் மிகக் குறைவாக உள்ளது. எனவே, நாள்தோறும் வெயிலில் அதிகமாக வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெயிலில் தொடர்ந்து வேலை செய்வோர் தங்களது உடலில் சிறிய அளவிலான அசெüகரியம் ஏற்பட்டால்கூட ரத்த அணுக்கள் பரிசோதனை, யூரியா, கிரியேட்டினின், ஜிஎஃப்ஆர் உள்ளிட்ட சிறுநீர், பொதுவான ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.