மதுரை: ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனுடன் கைகோர்த்துக் கொண்டு பசும்பொன் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, இனிமேல்தானே இருக்கும் என்று பதிலளித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் மூவரும் கூட்டாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் வந்தது குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த இபிஎஸ், ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் ஆகியோர் ஒன்றாக இணைவதே தேவையற்றது. இவர்கள் மூவரும் திமுவின் பி டீமாக செயல்படுகிறார்கள். 3 பேரும் இல்லாததால் தென் மாவட்டங்களில் அதிமுக பலவீனமடைந்து விட்டதாகக் கூறுவது தவறானது.
கட்சியில் இருந்து களைகள் அகற்றப்பட்டுள்ளன. இனி கட்சி செழித்துவளரும். கட்சியில் இருந்துகொண்டே உள்குத்து வேலைகள் செய்ததால்தான் 2021ஆம் ஆண்டு அதிமுக தோல்வியை அடைந்தது என்றார்.
ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினீர்கள், அதேபோல செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்க என்ன தயக்கம் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
எங்களுக்கு தயக்கம் எதுவும் இல்லை. இனிமேல்தானே இருக்கும். ஏற்கனவே கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுவிட்டன என்றார்.
மேலும், அதிமுகவை பொறுத்தவரை யார் துரோகம் செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுகவில் எத்தனை எட்டப்பர்கள், துரோகிகள் வந்தாலும் வீழ்த்த முடியாது. எங்கள் பக்கம் இருப்பது உண்மையான அதிமுகவினர் என்றும் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்தும் பிகார் பற்றியும் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பிகார் பற்றி எனக்குத் தெரியாது. வாக்காளர் சிறப்பு திருத்தத்தில் பிகாரில் என்ன நடந்தது என்பது குறித்து எனக்குத் தெரியாது, தமிழகத்தைப் பற்றி கேளுங்கள். பிகாரில் தவறு நடந்திருந்தால் நீதிமன்றத்தின் மூலம் ஏன் வழக்குத் தொடரவில்லை. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்குப் பிறகு முறையான வாக்காளர் பட்டியல் வெளியாகும் என நினைக்கிறேன் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பசும்பொன்னில் நடந்தது என்ன?
அதிமுகவிலிருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாக பசும்பொன் சென்று அங்குள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் கூட்டாக மரியாதை செலுத்தினர். மூவரும் ஒன்றாக சேர்ந்து தேவர் சிலைக்கு மாலையை அணிவித்தனர்.
முன்னதாக, முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகிய இருவரும் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு ஒரே காரில் பயணித்தனர். அபிராமம் பகுதியில் இருவரும் வந்த கார் சற்று நேரம் காத்திருந்த போது, டிடிவி தினகரனும் அங்கு வந்து அவர்களுடண் இணைந்தார்.
பிறகு, மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிக்க... பசும்பொன் தேவருக்கு ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் அஞ்சலி! சசிகலாவும் வருகை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.