ஆர்.எஸ். பாரதி கோப்புப்படம்.
தமிழ்நாடு

மோடியும் அமித் ஷாவும் பொய் சொல்வதில் வல்லவர்கள்: ஆர்.எஸ். பாரதி

மோடியும் அமித் ஷாவும் ஒருவர் ஒருவரை மிஞ்சுகிற வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்று திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

மோடியும் அமித் ஷாவும் ஒருவர் ஒருவரை மிஞ்சுகிற வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்று திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் மோடி பிகார் தேர்தல் பிரசாரத்தின் போது, இந்தியா கூட்டணியின் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல், வழக்கமாக மேற்கொள்கின்ற பொய்ப் பிரசாரத்தை அங்கும் அரங்கேற்றியுள்ளார். பிரதமர் மோடியின் பேச்சு, பிகார் மாநில மக்களிடையே தமிழர்கள் மீது அவநம்பிக்கையையும், விரோத மனப்பான்மையையும் ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது.

உத்தரப் பிரதேசம், பிகார், ஒடிசா உள்ளிட்ட பல வட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தமிழ்நாட்டில் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், பொய் பிரசாரத்தின் மூலமாக வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்ற குறுகிய மனப்பான்மையில் பிரதமர் செயல்படுகிறார். ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டிய இடத்திலும், பிளவுகளைச் சரிசெய்ய வேண்டிய இடத்திலும் தான் பிரதமர்கள் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சாதாரண நகராட்சி உறுப்பினருக்குக் கூட, ஜாதியின் பெயராலோ, மொழியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, மாநிலத்தின் அடிப்படையிலோ பிரசனைகளைப் பேசுகின்ற குறுகிய மனப்பான்மை ஏற்படாது. இத்தகைய எண்ணம் பிரதமருக்கு ஏற்பட்டிருப்பது வருந்தத்தக்கது.

இது மோடிக்கு புதிதல்ல, ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் ஆங்காங்கே போய் இப்படி "புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவது" பாரதிய ஜனதாவுக்கும் குறிப்பாக மோடி மற்றும் அமித் ஷாவுக்கும் கைவந்த கலை. அவர்கள் இருவரும் ஒருவர் ஒருவரை மிஞ்சுகிற வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள்.

ஒடிசா தேர்தலுக்கு எப்படி ஒரு தமிழரை இழிவுபடுத்திப் பேசினார்களோ, அதேபோல பிகாரில் தமிழ்நாட்டையும், தமிழர்களையும், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தையும், மு.க. ஸ்டாலினையும் மையப்படுத்தி மோடி பேசியிருக்கிறார்.

இந்த தமிழ்நாட்டில் எங்கேயாவது பிகார் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தாக்கப்பட்டதற்குரிய ஆதாரம் இருந்தால், அவர் வழக்கு போடட்டும்.

திமுக இந்தி திணிப்பைத் தான் எதிர்த்தது, எந்த காலத்திலும் இந்தி மொழியையோ, இந்திக்காரர்களையோ எதிர்த்ததில்லை. சென்னையில் 30-40% மக்கள் பிற மாநிலங்களைச் சார்ந்தவர்கள் வசதி வாய்ப்போடு இருக்கிறார்கள். தொழிலாளர்களும் நிம்மதியாக, எந்தவிதமான கவலையும் இல்லாமல் இரவு நேரத்தில் கூட வேலை செய்துவிட்டுச் செல்கிறார்கள்.

இவ்வளவு பாதுகாப்பாக ஆட்சி நடத்துகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது திட்டமிட்டு பிரதமர் மோடி பேசியிருப்பதை திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. ஒவ்வொரு தமிழரும் இதை உணர்ந்து மோடிக்கு எதிரான கண்டனக் குரலை எழுப்புவார்கள்.

பிரதமர் மோடியால் செய்ய முடியாத திட்டங்களை எல்லாம் ஒரு மாநிலத்தினுடைய முதலமைச்சர் செய்து இந்தியா முழுக்க ’ஃபேமஸ்’ ஆகி வருகிறார். கலைஞர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களை இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்திருக்கிறார்.

டெல்டா மாவட்டங்களில் 60 நாள்களில் 11.78 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

மேலும், பெரியாருடைய கருத்துக்கள் இந்தியா முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. தில்லி பல்கலைக்கழகத்தில், பெரியாருடைய விழா நடப்பது, முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் வந்த பிறகுதான் நடக்கிறது. இந்த பொறாமை பயத்தின் காரணமாகத்தான் மு.க. ஸ்டாலின் அவர்கள் மீது குறிவைத்து, "ஆப்ரேஷன் எம்.கே.எஸ்" என்ற அடிப்படையில் ஆரம்பித்துவிட்டார்கள். இதையெல்லாம் சந்திப்பதற்கு திமுக தயாராக இருக்கிறது என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.

பிகார் மக்கள் ஏமாற மாட்டார்கள். ஏனென்றால், நாடாளுமன்றத் தேர்தலில் மோடி எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரசாரம் செய்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செல்வாக்கோ, திமுக கூட்டணினுடைய செல்வாக்கோ குறையவில்லை. ஒழுங்காக பிகாரில் வேலைவாய்ப்பை அளித்திருந்தால், தமிழ்நாட்டிற்கு ஏன் வரப்போகிறார்கள்? நீங்கள் உங்கள் மக்களைக் காப்பாற்றத் தவறியதற்கு எங்கள் மீது பழி போடுவதா? என்று ஆர்.எஸ். பாரதி, கேள்வி எழுப்பினார். தமிழ் மண் பிகார் மக்களைக் காப்பாற்றுகிற மண் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

DMK Organizing Secretary R.S. Bharathi has said that Modi and Amit Shah are better liars.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட முருகன் பட்டு கூட்டுறவு விற்பனை நிலையம்

இந்த நாள் இனிய நாள்!

காஞ்சிபுரத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

உத்தரமேரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT