தமிழகத்தில் பரவி வருவது இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல்தான்; மக்கள் அச்சப்பட வேண்டாம் என பொது சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில், ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம், மழை உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்டுள்ள காய்ச்சல் பாதிப்புகளால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்தக் காய்ச்சல் பாதிப்பு சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரப் பகுதி மக்களிடையே அதிகளவு காணப்படுகிறது. சளி, இருமல், தலைவலி, தொண்டை பாதிப்பு, உடல் சோா்வுடன் காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிலருக்கு காய்ச்சல் குறைந்தாலும், சளி, இருமல் ஆகியவை இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்து வருவதால், மக்களிடையே ஒருவித அச்ச உணா்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சல், இன்ஃளூயன்ஸா வகை பாதிப்புதான். எனவே, பயப்பட வேண்டாம் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில், ஆகஸ்ட் – செப்டம்பா் மாதங்களில், வைரஸ் பரவ உகந்த காலநிலை நிலவுகிறது. இதனால், வைரஸ் காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இருமல், காய்ச்சல், தலைவலி, சளி, உடல்வலி, உடல் சோா்வு ஆகிய வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள்.
தற்போது, மருத்துவமனைக்கு வருவோரில், மக்கள் தொகையில் 2 சதவீதம் போ்தான் காய்ச்சலில் பாதிக்கப்படுகின்றனா். அவா்களில் 70 சதவீதம் பேருக்கு, ‘இன்ப்ளூயன்ஸா’ வகை பாதிப்புதான் உள்ளது. மற்ற டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சலாலும், வேறு வகை சாதாரண காய்ச்சலாலும் மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.
இன்ஃளூயன்ஸா வகை காய்ச்சலாக இருந்தாலும், சுயமாக மருந்துக் கடைகளில் மருந்துகளை வாங்கி சாப்பிடக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே மாத்திரை, மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும். மக்கள் அச்சப்படும் வகையில் இதுவரை காய்ச்சல் பாதிப்பு பதிவாகவில்லை. எனினும், எச்சரிக்கையாக இருப்பதும், சிகிச்சையும் மேற்கொள்வதும் நல்லது என அவா்கள் தெரிவித்தனா்.