சென்னைக்குள் மிகப் பயங்கரமான நவோனியா திருட்டுக் கும்பல் புகுந்திருப்பதாகவும், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நவோனியா திருட்டுக் கும்பல் என்பது, மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள். இவர்கள் கூட்டம் அதிகம் காணப்படும் பகுதிகளுக்குள் நுழைந்து, பொருள்களை கொள்ளைபடிப்பதில் கைதேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
மிகப் பயங்கரமான திருட்டுக் கும்பல்களில் ஒன்றாக அடையாளம் காணப்படும் நவோனியா திருடர்கள், சென்னைக்குள் நுழைந்திருப்பதை புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்திருப்பதையடுத்து, சென்னை காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் எழும்பூர், சென்னை சென்டிரல் ரயில் நிலையங்கள் போன்றவற்றுக்கு வரும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், அங்குதான் இவர்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுத் துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இதுவரை இந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த கும்பலால் மக்களின் உடைமைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
நகைகள், செல்போன், பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களை யாருக்கும் தெரியாமல் திருடுவதில் கைதேர்ந்தவர்கள் என்றும், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்களில், ஒரு சிறிய குழு தனித்தனியாகப் பிரிந்து பொருள்களைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்புவதை வழக்கமாகக் கொண்டவர்கள் என்றும், ஒரு சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை மட்டுமே ஒரு மாநிலம் அல்லது நகரத்துக்குள் தங்கியிருந்து பொருள்களை கொள்ளையடித்துக் கொண்டு சொந்த மாநிலம் திரும்பிவிடுவார்கள் என்றும் அதன்பிறகு அவர்களைக் கண்டுபிடிக்கவே முடியாது என்றும் கூறப்படுகிறது.
தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர்களிடம் நடத்திய விசாரணையில், மக்கள் வெளியே செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
அண்மையில், மெரினா கடற்கரை, மாம்பலம் ரயில் நிலையம் மற்றும் பல்வேறு ரயில் நிலையங்களில் செல்போன் உள்ளிட்டவற்றை திருடும்போது கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு தகவல்கள் தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவர்களிடமிருந்து கிடைத்தத் தகவலையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள ரயில்வே காவலர்களுக்கும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கமாக இவர்கள் தனியாகப் பயணிப்பவரை இலக்காக கொண்டு திருடுவதாகவும் சிலர், திருடியதை உடனடியாக விற்று விடுவதாகவும் கூறப்படுகிறது. எனவே யாரேனும் சந்தேகப்படும்படி நபர்களைப் பார்த்தால் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க... தேங்காய், எண்ணெய் பாட்டில்கள் திருட்டு.. மும்பை விமான நிலைய அதிகாரிகள் 15 பேர் பணிநீக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.