தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.
தில்லி அமித் ஷா இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், எடப்பாடி பழனிசாமியுடன் கட்சியின் மூத்த தலைவர்களான கே.பி. முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை, சி.வி. சண்முகம் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். சுமார் ஒருமணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.
ஏற்கெனவே கடந்த வாரம் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமியும் சந்தித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் வெளியேறிய நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அதிமுகவில் இருந்து விலகியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்திருந்த நிலையில், அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டார். இதனால் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்து அதிமுகவில் இருந்து விலகினர்.
இதனைத் தொடர்ந்து தில்லி சென்ற செங்கோட்டையன், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் தற்போது தில்லிக்குச் சென்றுள்ளார்.
இந்த சந்திப்பில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலைமை, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான விவாதம், தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து ஆலோசித்ததாகத் தெரிகிறது.
இதையும் படிக்க | தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.