எடப்பாடி பழனிசாமி - டிடிவி தினகரன் - செங்கோட்டையன். (கோப்புப்படம்)
தமிழ்நாடு

தன்மானம்தான் முக்கியம் என்றால் தில்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!

தன்மானம் முக்கியம் என்றால் தில்லி சென்றது ஏன்? என இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தன்மானம்தான் முக்கியம் என்றால் எடப்பாடி பழனிசாமி தில்லிக்குச் சென்றது ஏன்? என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான செங்கோட்டையன், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார்.

இதற்கு மத்தியில், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தில்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் அவர், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிடோரையும் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (செப்.16) அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “ நன்றி மறப்பது நன்றன்று - என இபிஎஸ் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது. நன்றியைப் பற்றி யார் பேசுவது? துரோகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத அவர் பேசுகிறாரா நன்றியைப் பற்றி?.

அதிமுகவை காப்பாற்றியது பாஜகதான் என பழனிசாமி பேசுகிறார். ஆனால், அம்மா (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) மறைவுக்குப் பின்னர், ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார்.

அவரை மாற்றிவிட்டு சின்னம்மாவை(வி.கே. சசிகலா) முதல்வராக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சேர்ந்து ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பின்னர், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் துவங்கினார்.

அப்போது திமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் இவரை (பழனிசாமி) காப்பாற்றியது பாஜக இல்லை. அதிமுகவின் 122 சட்டப்பேரவை உறுப்பினர்கள்தான்.

அவர்களில் 18 பேர் பழனிசாமியின் செயல்பாடுகள் சரியில்லை என்றுதான் ஆளுநரிடம் மனுகொடுத்து அவரை மாற்றவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அது அதிமுகவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக இல்லை. அன்றைக்கு நடந்த பிரச்சினை என்னவென்று நமக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

ஆட்சியைக் காப்பாற்ற 18 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்தது பழனிசாமி. எனவே நன்றிக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை.

எனது சித்தி (வி.கே.சசிகலா), பெங்களூரு சிறைக்குச் செல்வதற்கு முன்னதாக, கூவத்தூரில் நான் தான் முதல்வர் வேட்பாளர் என எம்எல்ஏ-க்களிடம் சொல்லாதீர்கள். அவர்கள் எனக்கு ஓட்டுப்போடமாட்டார்கள் என சொன்னவர் எடப்பாடி பழனிசாமி.

ஆர்கே நகர் தேர்தல் வந்த உடனே என்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, அதிமுகவை நீக்க முற்பட்டோம் என கூறுகிறார். ஆட்சியைக் காப்பாற்றியவர்களை கட்சியில் இருந்து நீக்கியது அவர்தான்.

டிடிவி தினகரன் இருந்தால் ஆட்சி போய்விடும் அதனால் அவரை நீக்க வேண்டும் என தில்லியை கூறியதாக அவர் தெரிவித்தார்.

இந்திய சமூக ஜனநாயகக் கட்சி கூட்டத்தில் பேசும்போது பழனிசாமி என்ன சொன்னர் என்பது எல்லாருக்கும் தெரியும். 2024 மக்களவைத் தேர்தல் மட்டுமல்ல; 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என பழனிசாமி கூறினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமர் மோடியின் வலது பக்கம் உட்கார்ந்துவிட்டு ஓடிவந்தவர் அவர். ஆனால், அதிமுகவை பாஜக காப்பாற்றியதாகக் கூறுகிறார்.

கட்சியை தோற்றுவித்தவர் போலவும், பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதலவரானவர் போலவும் பேசுகிறார். எப்படியெல்லாம் புரூடா விடுகிறார் பழனிசாமி.

தன்னை ஒற்றை தலைமையாக மாற்ற நினைத்தபோது பன்னீர்செல்வம் அதை எதிர்த்தார். நேற்று பேசும் போது நான் யாருக்கும் பயப்படமாட்டேன் எனக்கு தன்மானம்தான் முக்கியம் எனப் பேசுகிறார். அப்படி தனக்கு தன்மானம்தான் முக்கியம் என்றால் இன்று தில்லிக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏன்?

தென்மாவட்டத்திலும், டெல்டாவிலும் என மொத்தமாக பல்லாயிரம் கோடி செலவிட்டும் பழனிசாமி வெற்றிபெறாதது ஏன்?. பாஜகவுக்கு விசுவாசமாக செங்கோட்டையனை கைக்கூலி என பேசுகிறார். அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதால் வருகிற தேர்தலில் கண்டிப்பாகத் தோற்கடிக்கப்படுவார்.

பழனிசாமி பேசுவதைப் பெருசாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர் பேசுவது தில்லியில் இருப்பவர்கள் பெருசாக இருக்கலாம். ஆனால், நாங்கள் அவரைக் கண்டுகொள்ளவில்லை.

20 சதவிகிதமாகக் இருக்கும் அதிமுகவின் ஓட்டு வரும் தேர்தலில் 10 சதவிகிதமாகக் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்றார்.

If self-respect is important, why did you go to Delhi? TTV Dhinakaran questions EPS!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி! என்ன தெரியுமா?

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தும் ஆரெம்கேவி!

SCROLL FOR NEXT