எடப்பாடி பழனிசாமி இன்றுமுதல் முகமூடி பழனிசாமி என அழைக்கப்படுவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
தில்லி பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செவ்வாய்க்கிழமை இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு அமித் ஷாவின் வீட்டைவிட்டு காரில் வெளியேறிய எடப்பாடி பழனிசாமி, தனது முகத்தை மூடிக் கொண்டு செல்வதைப் போன்ற காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, டிடிவி தினகரன் பேசியதாவது:
”பழனிசாமியை இன்றுமுதல் முகமூடியார் பழனிசாமி என்று அழைக்க வேண்டும். செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில், தன்மானம் தான் முக்கியம் என்று பழனிசாமி பேசினார்.
வானிலை காரணமாக தனது சுற்றுப்பயணத்தை தள்ளிவைப்பதாக கூறிவிட்டு, தில்லிக்குச் சென்று உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளார். இவர்களின் சந்திப்பு ஏற்கெனவே ஊடகங்களில் வந்த செய்திதான். ஆனால், பொய் கூறி விட்டுச் செல்வது ஏன்?.
தமிழக மக்களையும் பிற அரசியல் கட்சியினரையும் இனிமேலும் பழனிசாமி ஏமாற்ற முடியாது. கூட்டணிக் கட்சித் தலைவரை தில்லியில் சந்தித்துவிட்டு, முகத்தை மூடிக் கொண்டு தலைவர் ஒருவர் வருவதை வரலாற்றில் யாரும் பார்த்ததில்லை.
அமித் ஷாவை சந்தித்த பிறகு மற்ற அதிமுக நிர்வாகிகளை அனுப்பிவிட்டு, சிறிது நேரத்துக்கு பிறகு தனது மகனுடன் பழனிசாமி வெளியேறியுள்ளார். முகத்தை இருவரும் மூடிக் கொண்டது சென்றது ஏன்? என அவர்தான் சொல்ல வேண்டும்.
எம்ஜிஆர் தொடங்கிய இந்த இயக்கத்தின் அடிப்படை விதி, தொண்டர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுப்பது என்பது. அதைதான் ஜெயலலிதாவும் பின்பற்றினார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி அடிப்படை விதியையே மாற்றியதால், எடப்பாடி திராவிட முன்னேற்றக் கழகமாக செயல்படுகிறது. அண்ணா திமுக தற்போது இல்லை. வருகின்ற தேர்தலில் எத்தனை கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் எடப்பாடி பழனிசாமி தோல்வியை சந்திப்பது உறுதி.” எனத் தெரிவித்தார்.
அதிமுக விளக்கம்
எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக் கொண்டு செல்வது போன்று வெளியான விடியோ குறித்து அதிமுக ஐடி பிரிவு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பான எக்ஸ் பதிவில் அதிமுக தெரிவித்திருப்பதாவது:
“முகத்தை துடைப்பதை, முகத்தை மூடிக்கொண்டு செல்வதாக தவறான கதையை பரப்பும் திமுகவிற்கு..
எடப்பாடியார் ஒன்றும் ஆட்சிக்கு வருவதற்கு முன் கருப்பு பலூனை பறக்க விட்டு; ஆட்சிக்கு வந்த பின் வெள்ளை குடையுடன் செல்லவில்லை. வெளிப்படையாக உள்துறை அமைச்சரை சந்திக்க சென்றார் என்பது நாடறியும். சந்திப்பு முடிந்ததும் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் அவசியம் அவருக்கில்லை.
கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்த பின் எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றாத நீங்கள் தான் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் சிறுவர் முதல் வயதானவர் வரை நடமாட பயப்படும் நிலையை உருவாக்கிய நீங்கள் தான் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.
தேர்தல் வருகிற நிலையில் மக்களை எதிர்கொள்ள முடியாமல் நீங்கள்தான் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.