நாமக்கல் விஜய் பிரசாரக் கூட்டத்தில் தாமதம் ஏற்பட்டபோது உயிர்சேதம் ஏற்படும் என தவெக பொதுச் செயலர் ஆனந்தை எச்சரித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
நாமக்கல் பிரசாரத்துக்கு சனிக்கிழமை காலை 8.45 மணிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் இருந்தே காலை 8.45 மணிக்குதான் விஜய் புறப்பட்டார்.
இதனிடையே, நாமக்கல்லில் கூட்டத்தை அதிகரிக்க வேண்டுமென்றே விஜய் தாமதமாக வந்ததாக நாமக்கல் டவுன் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நாமக்கல்லில் வேண்டுமென்றே விஜய்யின் வருகை தாமதப்படுத்தப்பட்டதால், கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் நிபந்தனைகள் மீறப்பட்டதை தவெக நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை.
பிரதான சாலை வழியாக தாமதமாக வந்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி நிபந்தனைகளை மீறினர். பலமுறை அறிவுறுத்தியும், எச்சரித்தும் காவல்துறை சொன்னதை கேட்கவில்லை.
அசாதாரண சூழல் ஏற்பட்டு கூட்டநெரிசலில் உயிர்சேதம், கொடுங்காயம், மூச்சுத்திணறல் ஏற்படும் என தவெக பொதுச்செயலர் ஆனந்த், மாவட்ட செயலாளர் சதீஷை எச்சரித்தோம்.
நாமக்கல்லில் காத்திருந்த பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மக்கள் கூட்டத்தை அதிகப்படுத்தி, அரசியல் பலத்தை காட்டும் நோக்கத்துடன் விஜய்யின் வருகை வேண்டுமென்றே 4 மணிநேரம் தாமதமாக்கப்பட்டது.
பல மணிநேரம் காத்திருந்த மக்கள், போதிய தண்ணீர், உணவு, மருத்துவ வசதி செய்யப்படாததால், அதிக கூட்டத்தால் ஏற்பட்ட அழுத்தத்தாலும் வெய்யிலின் தாக்கம் காரணமாகவும் மக்கள் சோர்வடைந்தனர்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.