தவெக தலைவர், நிர்வாகிகளுக்கு மனிதாபிமானம் இல்லை என்றுதான் தோன்றுகிறது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, "இறந்துபோன குழந்தைகள், இளைஞர்களின் குடும்பத்திற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இப்படி ஒரு துயரச் சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இது யாரையும் குறை சொல்லும் நேரமில்லை. யாரையும் குற்றம் சொல்வது தேவையில்லாத ஒன்று. இத்தகைய சூழலில் மக்களுடன் நிற்க வேண்டும்.
யார் மீது தவறு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் மனிதர்களோடு மனிதராக நிற்க வேண்டும்.
ஒரு கட்சியின் தலைவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஆறுதல்கூட சொல்லாமல் அந்த இடத்தை விட்டுப் போவதோ அல்லது தன்னுடைய பாதுகாப்பை மட்டும் கருதுவதோ நிச்சயமாக நான் இதுவரை பார்த்திராத ஒன்று. அவரால் இருக்க முடியவில்லை என்றால் அந்த இயக்கத்தைச் சார்ந்த அடுத்த கட்ட தலைவர்கள் இருந்திருக்க வேண்டும். மற்ற கட்சிகளில் அப்படிதான் இருக்கிறார்கள். இந்த சூழலைப் பார்க்கும்போது அவர்களுக்கு மனிதாபிமானம் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
ஒரு பொறுப்பான தலைவர் அந்த இடத்தை விட்டுச் சென்றிருக்கக் கூடாது. நீங்கள் சென்றாலும் குறைந்தபட்சம் உங்கள் கட்சி நிர்வாகிகளாவது அங்கு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நடந்ததற்கு கொஞ்சமாவது பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் பதிவு உச்சகட்ட பொறுப்பின்மையை காட்டுகிறது. சூழலை அமைதியாக்க நினைக்காமல் வன்முறை தூண்டும் வகையில், இன்னும் உயிரிழப்புகள் ஏற்படுத்தும் வகையிலான பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும். மக்களைப் பற்றி கவலை இல்லாமல், எப்படியாவது அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என நினைப்பது தவறு.
சிபிஐ விசாரணை வேண்டும் என யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். தனிநபர் ஆணையம் நியமிக்கப்பட்டு இருக்கிறது. விசாரணைக்கு அடுத்த நாளே வந்துவிட்டார்கள். விசாரணை தொடங்கி இருக்கிறது" என்று பேசியுள்ளார்.
இதையும் படிக்க | பிரசார கூட்டத்தில் மின்சாரத்தை துண்டித்தது யார்? திமுக மீது வீண் பழி சுமத்துகிறதா தவெக?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.