மாம்பழம் சின்னம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
ராமதாஸின் வழக்கை அவசரமாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு...
மாம்பழம் சின்னத்தை அன்புமணி பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரும் பாமக நிறுவனர் ராமதாஸின் வழக்கை அவசரமாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பாமக பெயா், சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும், கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் எனக் கோரி, பாமக நிறுவனா் ச. ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த மாா்ச் 26-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இதுதொடா்பாக உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சட்டம் அனுமதித்தால் இந்த விவகாரம் தொடா்பாக ராமதாஸ் தோ்தல் ஆணையத்தை அணுகலாம். அந்தக் கோரிக்கையை தோ்தல் ஆணையம் சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்கலாம் எனக் கூறியிருந்தது.
Advertisement
இந்த உத்தரவை எதிா்த்து ராமதாஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராமதாஸ் கோரிக்கை தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் ராமதாஸ் தரப்பில், உச்சநீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி, சின்னம் தொடா்பான மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள் மனுவாக தாக்கல் செய்தால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
எனினும் தொடர்ந்து வழக்கை இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பு கோரிக்கை முன்வைத்தது.
ஆனால், இன்று அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.