புதுவை மக்களே, விழிப்புடன் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்: விஜய்
புதுவை மக்களுக்கு தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தல்...
விழிப்புடன் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு புதுவை மக்களுக்கு தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
புதுவை யூனியன் பிரதேசத்தின் 30 தொகுதிகளுக்கு இன்று(ஏப். 9) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
என். ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக களம் காண்கிறது. சுமார் 9.50 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர்.
Advertisement
காலை 11 மணி நிலவரப்படி 37.06 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில்,
"புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே, இன்னும் சில மணிநேரங்களே உள்ள இத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுறப்போகும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.