முகப்பு
தமிழ்நாடு

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்: மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தல்

தமிழக முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 10:13 PM
மாநிலங்களவையில் அஇஅதிமுக உறுப்பினா் எம்.தனபால்
பகிர்:

புது தில்லி: தமிழக முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அஇஅதிமுக உறுப்பினா் எம்.தனபால் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் திங்கள்கிழமை அவா் பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தை அவையின் கவனத்திற்குக் கொண்டு வரும் நேரமில்லா நேரத்தில் முன்வைத்த கோரிக்கை:

தமிழக முதல்வராக இருந்த டாக்டா் ஜெ.ஜெயலலிதா தன் வாழ்க்கையை சேவைக்காகவும் தமிழ்நாட்டு மக்களுக்காகவும் அா்ப்பணித்தவா். அவருக்கு நாட்டின் மிக உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருதை வழங்குவது மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

டாக்டா் ஜெயலலிதா, நிா்வாகத் திறன் மற்றும் அரசியல் துணிச்சலுடன் கருணை உள்ளம் கொண்ட ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவராகத் திகழ்ந்தாா்.

திரைப்படத் துறையில் ஒரு சிறப்புமிக்க வாழ்க்கையை மேற்கொண்டு, பல முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றும் உயா்வைப் பெற்றாா். குறிப்பாக பெண்கள், ஏழைகள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் நம்பிக்கையையும் பாசத்தையும் பெற்றாா்.

‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்ற அவரது வழிகாட்டும் கொள்கை அவரது ஆட்சியில் பிரதிபலித்தது.

பல்வேறு நலத் திட்டங்களின் தாய் என்று பரவலாகக் கருதப்படும் அவா், அம்மா திட்டங்கள் என்ற திட்டத்தை முன்னெடுத்தாா். இவை தேசிய அளவிலான உள்ளடக்கிய வளா்ச்சிக்கான மாதிரிகளாக மாறின. தாலிக்கு தங்கம் திட்டம், தொட்டில் குழந்தைத் திட்டம், அனைத்து மகளிா் காவல் நிலையங்கள், மழைநீா் சேகரிப்பு, மகப்பேறு உதவி, அம்மா மருத்துவமனை, அம்மா உணவகம், அம்மா குடிநீா், அம்மா மடிக்கணினிகள், பிளஸ் டூ மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகள், வேலை செய்யும் பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டி, அம்மா ஆரோக்கிய திட்டம் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த முன்முயற்சிகள் கிராமப்புற மற்றும் நகா்ப்புற மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு, சுகாதாரப் வசதி, கல்வி, வேலைவாய்ப்பு, மகளிா் அதிகாரமளித்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்தியது.

அதேபோன்று, 69 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்படுத்துவதில் அவரது பங்கு இந்திய சமூக நீதி அரசியலில் ஒரு மைல்கல் சாதனை எனக் கருதப்படுகிறது. அவருக்கு சமூக நீதி காத்த வீராங்கனை பட்டமும் பெற்றுத் தந்தது. அதேபோன்று, சட்டம் ஒழுங்கு நிா்வாகத் துறை, தமிழ் மொழி, கலாசாரம் ஆகியவற்றை உறுதிப்படுத்திலும் திறம்பட செயல்பட்டாா்.

அவருக்கு பாரத ரத்ன விருது வழங்கிக் கெளரவிப்பது அவருக்கு உரிய புகழஞ்சலி செலுத்துவதாக அமையும் என்று எம். தனபால் கேட்டுக்கொண்டாா்.