முகப்பு
தமிழ்நாடு

காங்கிரஸ் தயார்? திமுக தயாரா? கூட்டணிப் பேச்சுக்கான குழுவை அமைக்க வலியுறுத்தல்!

திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்காக 70 நாள்களுக்கும் மேலாக காங்கிரஸ் காத்துக்கொண்டிருப்பதாக செல்வப்பெருந்தகை பேச்சு.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 12:22 PM
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை - கோப்புப் படம்
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக அமைக்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (பிப். 10) தெரிவித்தார்.

திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்காக 70 நாள்களுக்கும் மேலாக காங்கிரஸ் காத்துக்கொண்டிருப்பதாகவும், பேச்சுவார்த்தைக்கான குழுவை அமைக்காததால், தொண்டர்களிடையே வருத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களுடன் செல்வப்பெருந்தகை பேசியதாவது:

''கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவின் பயணத் திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. நாங்களும் தயாராக இருக்கிறோம்.

ராகுல் பேசியவை குறித்தும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் குறித்து நாளை முதல்வரிடம் பேசுவோம். முதல்வர் உடனே பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்க வேண்டும்.

பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதால் தொண்டர்கள் மத்தியில் வருத்தம் உள்ளது. தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணிக்கு பலரும் அவசரம் காட்டுவார்கள்.

காங்கிரஸ் கட்சியிடம் குழப்பம் இல்லை நாங்கள் தெளிவாக இருக்கிறோம். தயாராக இருக்கிறோம். திமுக தயாராக இருக்கிறதா? உடனடியாக பேச்சுவார்த்தைக் குழுவை முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.

summary

Insistence on forming a committee for coalition talks Congress state president SelvaPerunthagai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.