முகப்பு
தமிழ்நாடு

'நூலிழையில் உயிர் தப்பினேன்' - 1998 கோவை குண்டுவெடிப்பு குறித்து சி.பி. ராதாகிருஷ்ணன்!

1998 கோவை குண்டுவெடிப்பு குறித்து குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதிவு...

Updated On : 14 பிப்ரவரி 2026, 12:33 pm IST
கோப்புப் படம் - ENS
பகிர்:

1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பாஜக தலைவர் எல்.கே. அத்வானியைக் கொலை செய்யும் முயற்சியாக அல் உம்மா பயங்கரவாத அமைப்பினர் ஆா்.எஸ்.புரத்தில் 14 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி தாக்குதல் நடத்தினர். இதில் 58 பேர் கொல்லப்பட்டனர், 230-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விமானம் தாமதமானதால் அத்வானி உயிா் தப்பினாா்.

இந்த தொடா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் அல்-உம்மா இயக்க நிறுவனா் பாஷா உள்பட 156 போ் கைது செய்யப்பட்ட நிலையில், 16 போ் கோவை மத்திய சிறையில் உயா் பாதுகாப்புப் பிரிவில் தண்டனை அனுபவித்து வருகின்றனா். 2024 டிசம்பரில் பாஷா உயிரிழந்தார்.

Advertisement

Advertisement

இந்த சம்பவம் குறித்து கோவையைச் சேர்ந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்,

"14 பிப்ரவரி. 1998 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்த அப்பாவி மக்களை இந்நாளில் கனத்த மனதுடன் நினைவுகூர்ந்து எனது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். அது நம் தேசத்தின் வரலாற்றில் மறக்க முடியாத, இருண்ட பக்கமாகும்.

அன்று, எல்.கே. அத்வானி வந்திருந்த வேளையில் நிகழ்ந்த இந்த கொடூர குண்டுவெடிப்புகள், பல குடும்பங்களின் வாழ்வில் ஆறாத காயங்களை ஏற்படுத்தி, நம் நாட்டின் மனச்சாட்சியையே உலுக்கியது. அந்த நாளின் பயமும் பதற்றமும் நிறைந்த சூழ்நிலை இன்றும் என் நினைவில் ஆறாத வடுவாகப் பதிந்துள்ளது.

அந்த குண்டு வெடிப்புகளில் ஒன்றில் அன்று நான் மயிரிழையில் உயிர் தப்பினேன். குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்த்து காக்க போராடிய அந்த கொடிய நிமிடங்கள் என் வாழ்வின் துயரம் மிகுந்த காலங்கள்.

இந்நாளில் உயிரிழந்த ஒவ்வொரு ஆன்மாவையும் பணிவுடன் நினைவுகூர்ந்து, துயரத்தில் வாழும் குடும்பங்களுடன் ஒருமித்த உணர்வில் நின்று அவர்களது துயரங்களில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

இந்நாளில், அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒன்றுபட்டு நின்று, அமைதி, ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை காக்கும் வகையில் உறுதி எடுத்துக் கொள்வோம்." என்று பதிவிட்டுள்ளார்.

summary

Vice President C.P. Radhakrishnan on 1998 Coimbatore blasts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.