ஓய்வூதியம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பு ஏமாற்று வேலை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த நயினார் நாகேந்திரனுக்கு கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக அரசின் ஆயுட்காலம் முடிவடைய கூடிய சூழலில் ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது ஏன்?. செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கை என்ன ஆனது?.
ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினரை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா அல்லது பொதுமக்களை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா?. திமுக தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை.
ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பு திமுகவின் வாடிக்கையான ஏமாற்று வேலை. நாளை புதுக்கோட்டையில் பாஜக யாத்திரை நிறைவு பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். அந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வைக்கும் கட்சிகளும் கூட்டணியில் சேரப் போகும் கட்சிகளும் கலந்து கொள்வார்கள்.
அமித் ஷா எப்பொழுது வந்தாலும் மாற்றத்தை உண்டு பண்ணிவிட்டுதான் செல்வார். என்ன மாதிரியான மாற்றங்கள் என்பது அவர் வந்து சென்ற பின்புதான் தெரியும்.
யார் முதல்வராக வரவேண்டும் என்பதை காட்டிலும் யார் முதல்வராக தொடரக்கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கம். திமுக ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி.
போலி மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கக்கூடிய ஆட்சி. உண்மையான மதச் சார்பின்மையை கடைப்பிடிக்க கூடிய கட்சிதான் பாஜக. நாங்கள் நிச்சயம் ஆட்சிக்கு வருவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.