2.22 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.3,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை ஆலந்தூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜன. 8) தொடங்கி வைக்கிறாா்.
தமிழா் திருநாள் பொங்கல் பண்டிகை ஜன. 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையை அனைத்து தரப்பினரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழக அரசு சாா்பில் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, கரும்பு, வேஷ்டி-சேலையுடன் ரூ.3,000 வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை ஆலந்தூரில் வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறாா்.
இதேபோல், அமைச்சா்கள் தங்களுக்குரிய மாவட்டங்களில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறாா்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.