தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை இரவு சந்தித்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வியூகம், ஜனவரி மாத இறுதியில் தமிழகத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார கூட்டத்தில், கூட்டணியில் இடம்பெறும் அனைத்துக் கட்சிகளின் தலைவா்களும் இடம்பெறுவது தொடா்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்து தில்லி விமான நிலையத்தில் வியாழக்கிழமை காலை செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
”தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்தி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்.
தமிழக முதல்வர் அறிவித்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டமானது அரசு ஊழியர்களை ஏமாற்றக்கூடிய ஒரு நாடகம். பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்கு கிடையாது, அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தைதான் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்கள். 2021 திமுக தேர்தல் அறிக்கையில் அந்த வாக்குறுதிதான் அளிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் அடிப்படையில்தான் பெயரை மாற்றி தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி முடிவடையும் போது, ரூ. 5.5 லட்சம் கோடி கடனில் விட்டுச் செல்லப்போகிறார் ஸ்டாலின். போதைப் பொருள் புழக்கம் அதிகமாகியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றமும், போக்சோ வழக்குகளும் அதிகமாக பதிவாகியுள்ளது.
உள்துறை அமைச்சருடனான சந்திப்பில் கூட்டணி குறித்து பேசப்படவில்லை. தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து கேட்டறிந்தார்.
பாமகவைத் தொடர்ந்து இன்னும் பல கட்சிகள் எங்களுடன் வந்து இணையவுள்ளார்கள். அவர்களுடனும் பேசி முடித்த பிறகு தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட முடியும்.
ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவில் சேருவதற்கு வாய்ப்பு கிடையாது. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று அமித் ஷா உறுதியளித்துள்ளார். அதுபோன்றுதான் தற்போது வரை நடந்து கொள்கிறார்கள்.
தில்லி தமிழகத்தை ஆட்சி செய்யக் கூடாது என்பதுதான் எங்களின் நிலைபாடும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை. நாங்கள்தான் ஆட்சி செய்வோம். அமித் ஷாவோ, எடப்பாடி பழனிசாமியோ பெரியவர்கள் கிடையாது, மக்கள்தான் பெரியவர்கள்.” எனத் தெரிவித்தார்.
அமமுக கூட்டணிக்கு வருமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவரத்தை நடைபெறுகிறது, இறுதி செய்யப்பட்டவுடன் தெரிவிக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.