அரசியல், அமைப்புகள், சமூகம் ஆகியவற்றை கட்டமைக்கும் கருவியாக இலக்கியம் அமைந்துள்ளது என்றார் தமிழக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்.
தமிழ்நாடு அரசின் இலக்கியமாமணி விருது மற்றும் செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளையின் இலக்கிய விருது ஆகியவற்றை பெற்ற தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் பேராசிரியர் இரா.காமராசுக்கு மன்னார்குடியில் சனிக்கிழமை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் நடைபெற்றது.
இந்தப் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் கோவி. செழியன் பேசியதாவது:
மனிதனின் உள் உணர்வின் மூலம்தான் அவனின் சொல், செயல், ஆக்கம், முயற்சி, வெற்றி ஆகியவை கிடைக்கிறது. மூச்சுவிடுபவன் மட்டும் மனிதன் அல்ல, முயற்சி செய்பவனே உண்மையான மனிதன் என்ற சொல்லுக்கு அர்த்ததை, காமராசுக்கு பெற்றிருக்கும் விருதுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலக்கியம் என்பது ஏதோ பொழுதுபோக்குவதற்காகவோ, கவிதை பாடுவதற்காகவோ பேசிவிட்டு செல்வதில்லை. அரசியல் செயல்பாடு, அமைப்புகளின் தொண்டு, சமூகத்தின் பணி ஆகிவற்றை கட்டமைத்து உயிர்ப்பிக்கும் கருவியாக இலக்கியம் அமைந்துள்ளது.
பொதுவுடை இயக்கத்திற்கும், திராவிட இயகத்திற்கும் வேறுபாடு கிடையாது. பெரியார், அண்ணா ஆகியோருடன் பழகாமல் இருந்திருந்தால் நான் கம்யூனிஸ்ட்டாக இருந்திருப்பேன் எனக் கூறியவர் கருணாநிதி.
திராவிட மாடல் ஆட்சியில்தான் தகைசால் தமிழர் விருது முதன்முதலாக பொதுவுடைமை தலைவர் சங்கரையாவுக்கும் மறுஆண்டு சிபிஐ முன்னணி தலைவர் ஆர். நல்லக்கண்ணுவுக்கும் வழங்கப்பட்டது.
இதே போன்றுதான், முதல் முறையாக தமிழக அரசு வழங்கும் இலக்கியமாமணி விருது, பொதுவுடமை இயக்க எழுத்தாளர் இரா.காமராசுக்கு வழங்கியிருப்பதன் மூலம் பொதுவுடைமை இயக்க சித்தாந்தங்களை உயர்த்திப் பிடித்து மணிமகுடம் சூட்டியுள்ளது திமுக அரசு. அந்த வகையில் உரியகாலத்தில் உரிய இடத்தில் காமராசு உயர்த்தி வைக்கப்படுவார்.
விசுவாசம் ஒன்றுதான் மனிதனின் சொத்து, அதனை இழந்துவிடாமல் அதனை காத்து நின்றால் வாழ்க்கையில் உச்சம் தொடலாம். இலக்கியம் என்பது இடர்பாடுகாலத்தில் கட்சியை வளர்ப்பது. நெறுக்கடி காலக்கட்டத்தில் தணிக்கையைக் கடந்து மக்களுக்கு செய்தியை கொண்டு செல்வது. போர்முனையில் நிற்கும் வீரர்களுக்கு எச்சரிக்கை செய்வது, ஆக மொத்ததில் இலக்கியம் ஒரு ஆயுதமாக இருந்து வந்திருக்கிறது என்றார்.
நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில துணைத் தலைவரும் நாகை எம்பியுமான வை.செல்வராஜ் தலைமை வகித்தார்.
மாநிலக்குழு உறுப்பினர் செ. அண்ணாதுரை, மாவட்டச் செயலர் ம.சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். திமுக மாவட்டச் செயலரும் திருவாரூர் எம்எல்ஏவுமான பூண்டிகே.கலைவாணன், தஞ்சை எம்பி ச. முரசொலி, திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏகள் ஜி. பழனிசாமி, ப. பத்மாவதி, பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கே. கங்கா, தஞ்சை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அ. குணசேகரன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் ஜி. பாலு, நகர்மன்றத் தலைவர் த. சோழராஜன், அமமுக மாவட்டச் செயலர் எஸ். காமராஜ், மதிமுக மாவட்டச் செயலர் ப. பாலச்சந்திரன், திக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிபாசு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் வீ. சேதுராமன், தமுஎகச மாவட்டப் பொருளாளர் யு.எஸ். பொன்முடி, இலக்கிய வட்ட செயலர் எஸ்.கே. ரத்தினசபாபதி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பேராசிரியர் இரா.காமராசு ஏற்புரையாற்றினார். அவருக்கு விழாக்குழுவின் சார்பில், அமைச்சர் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினார்.
தகஇபெம பொருளாளர் ரா. கோபால் தொகுத்து வழங்கினார். முன்னதாக,கிளைச் செயலர் க. தங்கபாபு வரவேற்றார். நிறைவில், தலைவர் செ.செல்வகுமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.