மகளிருக்கு மாதம் ரூ. 2,000, ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து உள்ளிட்ட அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஜன.17) வெளியிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் சூழலில், அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் அவசர அறிவிப்பு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முதற்கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை வெளியிட்டார்.
அதன்படி, மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,000 வழங்கப்படும் என்றும், ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, 125 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாள்களாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும், அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் 5 லட்சம் மகளிருக்கு தலா ரூ. 25,000 வழங்கப்படும், வீடு இல்லாதோருக்கு இடம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என்றும் வாக்குறுதியில் தெரிவித்துள்ளார்.
வாக்குறுதி அறிவிப்புகளைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள நிதிச்சுமைக்கு மத்தியில் இந்த அறிவிப்புகள் எவ்வாறு சாத்தியமாகும் என்பது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “நாங்கள் ஆட்சி செய்யும் போது ரூ. 5.18 லட்சம் கோடிதான் கடன் இருந்தது. கரோனா காலத்தில்கூட நிதிச்சுமையைக் குறைத்து கொடுத்திருக்கிறோம். ஆளும் கட்சிக்கு திறமையில்லை; எங்களுக்குத் திறமை இருந்தது.
நிர்வாகத்திறன் இருக்கும் அரசு இருந்தால் நிதிச்சுமையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். நிர்வாகத் திறனற்ற அரசு இருந்தால் அதனைச் சமாளிக்க முடியாது. இரண்டாம் கட்டத் தேர்தல் அறிக்கைகள் வெளியிடும் போது அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளன” என்றார்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாக்குறுதிகள்
சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட குலவிளக்குத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரருக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும். இந்தத் தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
அதேபோல் ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும்.
தற்போது இருக்கும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
கிராமப்புறங்களில் வீடுகள் இல்லாதவர்களுக்கு அம்மா இல்லம் திட்டம் மூலம் அரசு சார்பில் இடம் வாங்கி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.
நகர்ப்புறங்களில் வசிக்கும் வீடுகள் இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் இடம் வாங்கி அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித்தரப்படும்.
ஒரே வீட்டில் வசிக்கும் பட்டியலின மக்கள், மகன்கள் திருமணம் செய்து தனிக்குடித்தனம் செல்லும்போது அரசு சார்பில் இடம் வாங்கி கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
100 நாள்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாள்களாக உயர்த்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்தத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும்.
அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் மகளிருக்கு ரூ. 25,000 மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
குலவிளக்குத் திட்டத்தில் ரூ. 2,000, ஆண்களுக்கான கட்டணமில்லா பேருந்து உள்ளிட்ட வாக்குறுதிகள் சாமானியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இரண்டாம் கட்ட வாக்குறுதிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.