மத்திய அமைச்சரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளருமான பியூஸ் கோயல் வருகின்ற புதன்கிழமை சென்னைக்கு வருகை தரவுள்ளார்.
மேலும், அவரது முன்னிலையில் வருகின்ற ஜன. 22 ஆம் தேதி அதிமுக - பாஜக இடையே தேர்தல் கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை அதிமுக மற்றும் பாஜக இறுதி செய்து வருகின்றன.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிமுக தலைமையில் செயல்படும் என்று ஏற்கெனவே பாஜக அறிவித்துள்ள நிலையில், பாமகவும் கூட்டணியில் இணைந்துள்ளது.
இதனிடையே, வருகின்ற ஜன. 23 ஆம் தேதி மதுராந்தங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
பிரதமரின் வருகைக்கு முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளான அதிமுக, பாஜக, பாமக இடையே தேர்தல் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இதற்காக தில்லியில் இருந்து மூன்று நாள் பயணமாக ஜன. 21 ஆம் தேதி சென்னை வரும் பியூஸ் கோயல், தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து கூட்டணி ஒப்பந்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடனும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
பிரதமரின் பொதுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் மேடை ஏற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.