சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச வழக்கு தொடர்பாக, சென்னை உள்ளிட்ட 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
சபரிமலை கோயிலில் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகர் சிலைகளின் 42 கிலோவுக்கும் அதிக எடைகொண்ட தங்க முலாம் பூசிய கவசங்கள், கடந்த 2019-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டன.
அப்போது, அந்த தங்கக் கவசங்கள் முறையாகக் கையாளப்படாமல், செம்புத் தகடுகள் என தவறாக கணக்குக் காட்டப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக கேரள உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது.
இவ்விவகாரத்தில் 2 தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட எஸ்ஐடி, தங்கக் கவசங்களின் புதுப்பித்தல் செலவை ஏற்றுக்கொண்ட பெங்களூரு தொழிலதிபர் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் முன்னாள் தலைவர்கள் இருவர் உள்பட பலரைக் கைது செய்தது.
இதில், சென்னையைச் சேர்ந்த ஸ்மாா்ட் கிரியேஷன்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பங்கஜ் பண்டாரி, கர்நாடக மாநிலம், பெல்லாரியைச் சோ்ந்த நகைக்கடை அதிபர் கோவா்தன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
தங்கக் கவச முறைகேடு விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள பல்வேறு புகார்களின் அடிப்படையில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை அண்மையில் வழக்குப் பதிவு செய்தது.
இந்த முறைகேட்டில் தொடா்புடைய நிதி மோசடி மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்கத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், மத்திய புலனாய்வு அமைப்பின் தலையீடு விசாரணையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளது.
இந்த நிலையில் கேரளம் மற்றும் பெங்களூருவிலும் சோதனையில் ஈடுபட்டுள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் மொத்தம் 21 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் தங்க முலாம் பூசும் நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையைச் சேர்ந்த பங்கஜ் பண்டாரின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.