அழுத்தத்துக்கு பயப்படுகிற ஆள் நான் இல்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று(ஜன. 25) மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையிலான இந்தக் கூட்டத்தில் மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:
அழுத்தம் எனக்கு கொடுக்கப்படுகிறாதா என்றால் இருக்கு; ஆனால் எனக்கில்லை மக்களுக்கு, அழுத்தத்துக்கு பயப்படுகிற ஆள் நான் இல்லை.
அவர்கள் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். நம்மை 30 ஆண்டுகளாக குறைத்து மதிப்பிட்டு வருகிறார்கள். ஆனால், மக்கள் நம்மை சரியாக மதிப்பிட்டுதான் வருகிறார்கள்.
அரசியலுக்கு வந்த பிறகும் சரி, ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகும் சரி, இதற்கு முன்னாடி இருந்தவர்கள் போலவும் தற்போது இருப்பவர்கள் போலவும் ஊழல் செய்யமாட்டோம், அதை நான் தொட மாட்டேன்.
ஒரு துளி ஊழல் கறைகூட படியவே படியாது, படியவும் மாட்டோம். எதுக்கும் ஆசைப்படாத ஒருவன், அரசியலுக்கு வருகிறான் என்றால், அவன் கண்முன்னாடி தவறு நடந்தால் அதனைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டான்.
இது என்ன சினிமாவா, முதல்வன் படத்தில் வருகிற மாதிரி ஒரே நாளில் எல்லாவற்றையும் க்ளீன் பண்ணிடுவீங்களானு கேட்கலாம்; நடைமுறையில் அது சாத்தியம் இல்லைதான். ஆனால் அது தொடர் பணி.
தீய சக்தி, ஊழல் சக்தி தமிழகத்தில் ஆட்சியில் அமரக் கூடாது. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அடங்கி போவதற்கும் அடிமையாக இருப்பதற்கும் அரசியலுக்கு நான் வரவில்லை. மக்களைப் பாதுகாப்பதற்கு மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன்.
மக்களுக்கு என்மேல் நம்பிக்கை இருந்தால் போதாது, என்னுடன் இருக்கும் தோழர்கள் மீதும் அந்த நம்பிக்கை மக்களுக்கு வரவேண்டும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.