தேனி : வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) கட்சி பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்தார். வரும் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தே அமமுக போட்டியிட உள்ள நிலையில், தேனியில் குடியரசு நாளில் செய்தியாளர்களுடன் தினகரன் பேசியதாவது :
“முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அதிகாரத்தில் இருக்கும்போது அதை நெருக்கமாக கூடவிருந்து பார்த்துவிட்டதாகவும், ஆகவே, தன்னுடன் அமமுக நிறுவப்பட்டநாள் தொடங்கி உடனிருப்பவர்களை வெற்றி பெறச் செய்து அவர்களை அமைச்சர்களாக்கிப் பார்ப்பதே தனது விருப்பம்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “திமுக அரசை நீக்கி, அஇஅதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அம்மாவின் ஆட்சியை அமைப்பதே விருப்பமெனவும், அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் ஓர் அங்கமாக அமமுக இருக்கும்” என்றார்.
“ஜெயலலிதா மறைவுக்குப்பின், அம்மாவின் ஆதரவாளர்களுக்கு அவருடைய இடத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடி ஒளி விளக்காக வழிகாட்டி வருவதாகவும்” புகழாரம் சூட்டினார்.
“பழனிசாமியுடன் கருத்து வேறுபாடுகளைக் களைந்துவிட்டதாகவும், ஆகவே அவருடன் கைகோத்து தேர்தல் பிரசாரம் செய்வேன்” என்பதையும் உறுதிப்படுத்தினார். “பழனிசாமி தமது மூத்த சகோதரரைப் போன்றவர்” என்றும் பேட்டியில் குறிப்பிட்டார்.
“முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ஒரு சிலரது அறிவுரையை ஏற்று அதன்பேரில் தர்ம யுத்தம் போராட்டத்தை நடத்தினார். ஆனால், அவர் அப்படிச் செய்யாமல் இருந்திருந்தால், அவரே கடந்த காலத்தில் முதல்வராக நீடித்திருப்பார்” என்றார்.
விஜய் பற்றிய அதிமுகவின் விமர்சனத்துக்குப் பதிலளித்துப் பேசிய அவர், “விஜய் ஊழல் பற்றி வீட்டிலிருந்தபடியே பேசி வருகிறார். முதலில், அவரால் சினிமா டிக்கெட் ப்ளாக்கில் விற்பனை செய்யப்படுவதைக்கூட தடுத்து நிறுத்த முடியாது” என்று விமர்சித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.