புதுச்சேரியில் குடியரசு நாளை முன்னிட்டு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தேசியக்கொடி ஏற்றினார்.
நாட்டின் 77-வது குடியரசு நாள் இன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு நாளை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் பல்வேறு படைப்பிரிவினர் மற்றும் என்.சி.சி மாணவர்கள் உள்ளிட்ட பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பெறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக கைலாஷ்நாதன் தேசியக்கொடியை ஏற்றினார். விழாவில் முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலர், டிஜிபி, உள்ளிட்ட உயரதிகாரிகள், அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து விழாவில், குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம், மத்திய உள்துறை அமைச்சரின் காவல் பதக்கம், துணைநிலை ஆளுநரின் காவல் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் காவல் துறையினருக்கு வழங்கப்பட்டது. அதேபோன்று பள்ளி இறுதித்தேர்வுகளில் சாதனைகள்புரிந்த பள்ளிகளுக்கு முதல்வரின் சுழற்கேடயங்கள் மற்றும் நினைவுப்பரிசுகளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வழங்கினார்.
குடியரசு நாள் விழாவையொட்டி விழா நடைபெற்ற புதுச்சேரி கடற்கரை சாலை முழுவதும் காவல் துறையின் கட்டுப்பட்டுக்கு கொண்டு வரப்பட்டு 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழாவில் பல்வேறு அரசுத் துறைகளின் அலங்கார ஊர்திகள் ஊர்வலமாக வந்தது. மேலும் பள்ளி மாணவிகளின் கண்கவர் நடனங்கள் காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.