கோவை: தவெகவுடன் கூட்டணி வைக்க அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விரும்பியதாக தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்துக்கு வருகைதந்த செங்கோட்டையனிடம், தவெக மீதான அதிமுக விமர்சனம், அதிமுக கூட்டணியில் தினகரன் இணைந்தது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விகளுக்கு பதிலளித்து செங்கோட்டையன் பேசியதாவது:
”பாமக ராமதாஸ் தவெகவுடன் பேசியதாக செய்தி பார்த்தேன், நல்லது நடக்கட்டும். அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் அண்ணாவை மறந்துவிட்டனர். ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரையும் மறந்துவிட்டார்கள். அதனால்தான் வெளியே வந்தேன்.
என் பாக்கெட்டில் இன்னும் ஜெயலலிதா படம் உள்ளது. வளர்த்து விட்டவர்களை மறக்க கூடாது. நான் எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு பயணம் செய்தவன், சிறப்பான முறையில் ஆட்சியில் பங்கு கொண்டவன். என் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு உச்சநீதிமன்றம் வரை தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
நான் தூய்மையானவன் என்பதற்கு உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்கு தொடரப்பட்டது. மாறாக போக்குவரத்து கழகத்தில் என்னால் வருவாய் ஏற்பட்டது என்றுதான் தீர்ப்பு உள்ளது. என் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தால் நிருபிக்க வேண்டும். இல்லையெனில் வழக்கு தொடர்வேன்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எங்களுடன் வரவேண்டும் என நினைத்தார். ஒவ்வொரு நாளும் ஒரு நிலை எடுக்கிறார்கள். அவர் ஒரு நிலைப்பாடு எடுத்துள்ளார், எங்கு சென்றாலும் வாழ்க.
தவெக எந்த கட்சியுடன் பேசினாலும் உடனே தில்லியில் இருந்து வந்து விடுகிறார்கள். என்ன பிரச்சனை என்று எங்களுக்குதான் தெரியும். நாங்கள் சொல்லாமல் இருப்பது நல்லது.
எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோதும் 100 நாள்கள்கூட ஓடாது என்றார்கள். ஆனால், அவர் உயிரோடு இருக்கும்வரை முதல்வராக இருந்தார். அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோதுகூட அவர் வெற்றிபெற்றார்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.