நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ்
நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியின் 5-வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்த 100 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.விழாவில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “அரசு பொறுப்பேற்ற பிறகு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
Advertisement
Advertisement
மருத்துவமனைக்கு வரும் எளிய மக்கள் மருத்துவர்களைக் கண்கண்ட தெய்வமாக கருதுகின்றனர். நோயிலிருந்து குணமடைந்தவர்கள் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் மிகவும் பெருமைக்குரியது” என்றார். மேலும், “புதிய மருத்துவ உபகரணங்கள் மட்டுமே மக்களுக்கு முழு திருப்தியை அளிக்காது.
சேவை மனப்பான்மையுடன் செயல்படும்போதுதான் மருத்துவத் துறையின் உண்மையான நோக்கம் நிறைவேறும். மருத்துவர் தொழிலில் பெருமை இருந்தாலும், சிறிய தவறுகள்கூட சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறும் சூழல் உள்ளது. போட்டி நிறைந்த உலகில் முதுகலை மருத்துவப் படிப்பு முக்கியமானதாக உள்ளது.
அதேசமயம் மருத்துவர்கள் தங்களது உடல்நலனையும் கவனித்துக் கொள்ள வேண்டும்” என்றார். நீட் தேர்வு அழுத்தம் குறித்து பேசிய அவர், “நீட் தேர்வால் இரு மாணவர்கள் பலியான சம்பவம் வேதனை அளிக்கிறது. மாணவர்களால் இந்த மன அழுத்தத்தை தாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பிலும் அழுத்தங்கள் இருக்கும். அதனை மனவலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி மேம்படுத்துதல், சிறப்பு மருத்துவர்கள் நியமனம், கூடுதல் டயாலிசிஸ் இயந்திரங்கள், நர்சிங் மாணவர்களுக்கான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
பட்டமளிப்பு விழா மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
Minister Arunraj has stated that there is mental stress from NEET to postgraduate medical studies, and mental strength is essential.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.