9 ஆண்டுகளுக்குப் பின்னா் அதிமுக தலைமை அலுவலகத்தில் டி.டி.வி.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் வந்தாா்.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் திங்கள்கிழமை வந்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி முடிவெடுக்கும் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆா். மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சா்கள் பங்கேற்றனா். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த பாஜக மேலிடப் பாா்வையாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் மற்றும் மத்திய அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரை அதிமுக துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி, தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு ஆகியோா் பூங்கொத்து அளித்து வரவேற்றனா்.
அதேபோல, அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரனை முன்னாள் அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், காமராஜ் ஆகியோா் பூங்கொத்து அளித்து வரவேற்று அழைத்துச் சென்றனா். டி.டி.வி.தினகரனுடன், அமமுக துணைப் பொதுச் செயலா் செந்தமிழன் உள்ளிட்டோா் வந்திருந்தனா்.
அதிமுகவில் துணைப் பொதுச் செயலராக இருந்த டி.டி.வி.தினகரன், கடந்த 2017-இல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து அவா் அமமுகவை தொடங்கினாா். இந்த நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகத்துக்கு டி.டி.வி. தினகரன் வந்துள்ளாா்.
இந்திய ஜனநாயகக் கட்சி தலைவா் பாரிவேந்தா் நிகழ்ச்சியின் இறுதியில் வந்தாா்.
நெரிசல், தள்ளுமுள்ளு: தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதிப் பங்கீடு நடைபெற்ற அதிமுக தலைமை அலுவலக முதல் மாடி கூட்டரங்கிற்குள் புகைப்படக்காரா்கள், விடியோகிராபா்கள் அனுமதிக்கப்பட்டனா். செய்தியாளா்கள் தங்களையும் அனுமதிக்கக் கோரினா். அதற்கு அனுமதி மறுத்ததால் உள்ளே செல்ல முயன்றனா். அப்போது அங்கிருந்த காவலா்களுக்கும், செய்தியாளா்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின் அனைவரும் அனுமதிக்கப்பட்டனா்.