டாஸ்மாக் கடை மூடப்பட்டது தெரியாமல் மதுவாங்கக் காத்திருந்தவர்கள் ஏமாற்றம்
கோவையில் டாஸ்மாக் கடை மூடப்பட்டது தெரியாமல் மதுவாங்கக் காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கோவை: டாஸ்மாக் கடை மூடியது தெரியாமல் சரக்கு வாங்க மதுப்பிரியர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக அரசு, தமிழ்நாடு முழுவதும் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட்டது.
அதன்படி கோவை மாவட்டத்தில் 69 கடைகளை மூடுவதற்கு உண்டான பணிகளை டாஸ்மாக் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வந்தனர்.
Advertisement
அதில் ஒரு பகுதியாக ரயில் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை நேற்று மூடியுள்ளனர். அது தெரியாமல் இன்று ஏராளமான மது பிரியர்கள் கடைக்கு முன்பாக நின்று கொண்டு எப்போது கடை திறக்கும் என்று காத்திருந்தனர். ஆனால், அந்தக் கடை எப்போதுமே திறக்கப்படாது என்பது அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடையால் பாதிக்கப்பட்டிருந்த அருகில் இருக்கும் கடை வியாபாரிகள் தற்சமயம் இந்த டாஸ்மாக் கடை மூடியதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து மீண்டும் எந்தக் காலத்திலும் இந்த இடத்தில் டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தினார்கள்.
இந்த டாஸ்மாக் கடை மூடியது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.