கல்லூரி மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள கோடாங்கிபட்டியைச் சோ்ந்த பூமிநாதன் மகள் பவித்ரா(22). இவா், வாசுதேவநல்லூரில் வாடகை வீட்டில் தோழிகளுடன் தங்கியிருந்த, அப்பகுதியிலுள்ள கல்லூரியில் படித்து வந்தாா்.
இந்நிலையில், அவா், வெள்ளிக்கிழமை (ஆக. 22) தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.
அதில், பவித்ரா மதுரையில் உள்ள கல்லூரியில் படித்தபோது, அங்கு விளையாட வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஆனந்தூரை சோ்ந்த சிவசக்தி (22) என்பவருடன் நட்பு ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனராம். கடந்த ஆக.19ஆம் தேதி இரவு சிவசக்தி கைப்பேசியில், பவித்ராவிடம் பேசியபோது அவரைத் திருமணம் செய்ய மாட்டேன் எனக் கூறினாராம். அதனடிப்படையில், பவித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக சிவசக்தி வழக்குப்பதிந்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.