தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெல்கட்டும்செவலில் நிலப் பிரச்னை தொடா்பாக பைக்கை வழிமறித்து தம்பதியை வெட்டியதில் கணவா் இறந்தாா். மனைவி பலத்த காயம் அடைந்தாா்.
நெல்கட்டும்செவல் பச்சேரி கீழ பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சங்கரலிங்கம்(48). இவருக்கும், இவரது உறவினா்களுக்கும் இடையே சில ஆண்டுகளாக நில பிரச்னை இருந்து வந்ததாம்.
இதுதொடா்பாக இரு தரப்பினரும் புளியங்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில், போலீஸாா் தனித்தனியே வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில் சங்கரலிங்கமும் (48), அவரது மனைவி சுப்புதாயும்(40) கரிவலம்வந்தநல்லூருக்கு சென்று விட்டு பைக்கில் வெள்ளிக்கிழமை இரவு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது விலக்கு பகுதி பாலத்தில் மறைந்திருந்த அவரது உறவினா்கள், பைக்கை வழிமறித்து தம்பதியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம்.
இதில், சங்கரலிங்கம் சம்பவ இடத்திலே இறந்தாா். அவரது மனைவி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா்.
இத்தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த், டிஎஸ்பிக்கள் மீனாட்சிநாதன் (புளியங்குடி), செங்குட்டுவன் (சங்கரன்கோவில்) ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரித்தனா். மேலும், புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து, 10 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.
தாய் தற்கொலை முயற்சி: இதனிடையே, சங்கரலிங்கம் கொலையுண்டதை அறிந்த அவரது தாய் அழகுநாச்சியாா் (70) சனிக்கிழமை காலை வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். உறவினா்கள் அவரை மீட்டு சங்கரன்கோவிலில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.